யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன் நியமனம்
யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தற்போதைய விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் விக்னேஸ்வரன், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இவ் உத்தியோகபூர்வ அறிவித்தல், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் மூலமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் இதுவரை காலமும் துணைவேந்தராக கடமையாற்றிய பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் பதவிக்காலம் கடந்த 24ஆம் திகதியுடன் நிறைவடைந்த போதிலும், புதிய துணைவேந்தர் நியமனத்தில் இழுபறி நிலை காணப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் நடத்தப்பட்ட துணைவேந்தர் தெரிவில் முன்னிலை வகித்த மூவரின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரையுடன் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
துணைவேந்தர் நியமனத்தில் பல்வேறு தலையீடுகளும் அரசியல் அழுத்தங்களும் காணப்படுவதாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில, இந்நியமனத்தில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது பேராசிரியர் விக்னேஸ்வரன் யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.