குப்பைமேடு சரிந்த இடத்தில் பரவியுள்ள மீதேன் வாயு – ஜப்பானிய நிபுணர்கள் எச்சரிக்கை
மீதொட்டமுல்லவில் குப்பை மேடு சரிந்த பகுதியில் மீதேன் வாயுவின் அளவு அதிகமாக இருப்பதாக ஜப்பானிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மீதொட்டமுல்லைவில் கடந்த 14ஆம் நாள் குப்பை மேடு சரிந்த விபத்தில் 32 பேர் மரணமாகினர். மேலும் 30இற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.
இந்த நிலையில், சிறிலங்கா பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, ஜப்பான் நிபுணர்கள் குழுவொன்றை சிறிலங்காவுக்கு அனுப்பியுள்ளது.
நேற்று முன்தினம் கொழும்பு வந்த ஜப்பானிய நிபுணர்கள் நேற்று இரண்டாவது நாளாக மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
11 பேர் கொண்ட ஜப்பானிய நிபுணர் குழுவில், சூழலியலாளர்கள், கழிவு முகாமைத்துவ நிபுணர்கள், மற்றும் புவியியல் வல்லுனர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் நேற்று நடத்திய ஆய்வின் போதே, சரிந்து விழுந்த குப்பை மேட்டுப் பகுதியில் மீதேன் வாயுவின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த இடத்தில் வழக்கத்தை விடவும், 960 மடங்கு அதிகளவு மீதேன் வாயுவின் அளவு காணப்படுவதாகவும், காற்றில், 16 வீதம் மீதேன் வாயு கலந்திருப்பதாகவும் ஜப்பானிய நிபுணர்கள் தெரிவித்தனர்.
மீதேன் வாயுவின் அளவு அதிகளவில் இருப்பதால், மீட்புப்பணிகளில் கனரக வாகனங்களை ஈடுபடுத்தியுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே ஜப்பானிய நிபுணர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு தமது அறிக்கையை வரும் திங்கட்கிழமை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.