Breaking News

கூட்டணிக்கான நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது: திருநாவுக்கரசர்

விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகள் சார்பில் சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் பேசியதாவது:-

தமிழகத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான பொதுக்கூட்டமாக இந்த கூட்டம் அமைந்துள்ளது. என்னிடம் செய்தியாளர்கள், ‘இந்த கூட்டம் அரசியல் கூட்டணியாக மாறுமா?’, என்று கேட்டனர். அதற்கு நான், ‘மாறினால் மகிழ்ச்சி’, என்றேன்.

இன்றைக்கு இந்த கூட்டத்தில் பேசியவர்களை வைத்து பார்க்கும்போது, கூட்டணிக்கான நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவே கருதுகிறேன். அதற்கான சூழல் தமிழகத்தில் இப்போது தேவையானதாகவே உள்ளது. மத்திய பா.ஜ.க. அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

காவிரி பிரச்சினையில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து முக்கிய பிரச்சினைகளிலும் பா.ஜ.க. அரசு துரோகம் செய்து வந்துள்ளது. தமிழக விவசாயிகளை மட்டுமல்ல, தமிழகத்தையே மத்திய அரசு புறக்கணிக்கிறது.

ஜெயலலிதா மறைவு குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று சிலர் இப்போது சொல்கிறார்கள். அதை நான் வரவேற்கிறேன். அதேநேரம் இந்த சி.பி.ஐ. விசாரணைக்குள் பிரதமரையும், மத்திய சுகாதாரத்துறை மந்திரியையும் சேர்க்கவேண்டும்.

எம்.ஜி.ஆர். உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவர் வெளிநாட்டில் சிகிச்சை எடுப்பதற்கு இந்திராகாந்தி உதவி செய்தார். ஆனால் 75 நாட்கள் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது, பிரதமர் மோடி பார்க்கக்கூட வரவில்லை. இது எல்லாம் சி.பி.ஐ. விசாரணையின்போது தெரியவரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-


தேர்தல் அரசியலுக்காக கைகோர்க்காமல் தமிழக மக்களுக்காக கைகோர்க்கும் முயற்சியை மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து இருக்கிறார். தமிழக நலனை பாதுகாக்க வேண்டும் என்ற நிலையில் மு.க.ஸ்டாலின் இந்த முடிவை எடுத்து உள்ளார்.

இன்றைக்கு தமிழக விவசாயிகளுக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தமிழகத்துக்கே ஆபத்து ஏற்பட்டு உள்ளது. பா.ஜ.க.வின் அடுத்த குறி தமிழகம் தான். நெருக்கடி கொடுத்து ஒரு கட்சியை ஒடுக்கியது போல, தி.மு.க.வை வீழ்த்துவதற்கும் பா.ஜ.க. முயற்சி செய்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பது தான், அவர்களின் நோக்கம்.

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிட இயக்க ஆட்சி நடந்து வருகிறது. இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சித்த போதெல்லாம் தி.மு.க. எதிர்த்தது. எனவே இன்றைய சூழலில் மத்திய அரசை எதிர்க்கும் ஆற்றல் தி.மு.க.வுக்கு மட்டுமே உள்ளது.

தமிழகத்தில் காலூன்ற முடியாத எரிச்சல் காரணமாக பா.ஜ.க. அரசு தமிழக நலனை புறக்கணிக்கிறது. தமிழகத்தில் எல்லோருக்கும் நெருக்கடி கொடுத்து ஆட்சியை பிடித்துவிடலாம் என்று பா.ஜ.க. நினைக்கிறது. அவர்களின் பகல் கனவு என்றைக்கும் பலிக்காது. இன்றைக்கும் தமிழக நலனை பாதுகாக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். வரும் 25-ந்தேதி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தை அனைவரும் வெற்றி பெற செய்யவேண்டும். சாதியவாதிகளும், மதவாதிகளும் முதல்-அமைச்சர் கனவில் மிதந்து கொண்டு யார், யாருடன் கைகோர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்? என்பது உங்களுக்கு தெரியும். எனவே தமிழகத்தின் நலன் காக்க தி.மு.க.வுக்கு விடுதலை சிறுத்தைகள் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-


இந்த கூட்டத்தில் திருமாவளவன் பேசியதை நான் வழிமொழிகிறேன். தமிழகத்தின் மானம் காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. தமிழகத்தை ஆட்டிப் படைக்கலாம் என்று பா.ஜ.க. அரசு நினைக்கிறது. அந்த முயற்சியை தடுக்க வேண்டும். இந்த கூட்டம் தேர்தலுக்கு அச்சாரமா? என்று கேட்கிறார்கள். தேர்தல் கூட்டணியாக அமைந்தால் தான் என்ன? நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டிய நேரம் இது. எந்த காலத்திலும் தமிழகத்தில் காவிகள் ஆட்சியை பிடிக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவர் இரா.முத்தரசன் பேசும்போது, “மத்திய அரசு தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. இந்த கூட்டம் அரசியல் கூட்டமாக இருக்கக்கூடாது என்று கூறுகிறார்கள். எதில் தான் அரசியல் இல்லை? எல்லாவற்றிலும் அரசியல் உள்ளது. எனவே மதவாத சக்திகளை தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

இது அனைத்துக் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டம் என்பதால், பொதுக்கூட்டம் நடந்த பகுதியில் கட்சி கொடிகள் எதுவும் பறக்கவிடப்படவில்லை.