அதிபர் தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்புக்கு எழுத்து மூலம் வாக்குறுதி வழங்கினார் மைத்திரி
சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட்ட போது, சிறிலங்கா படையினர் வசம் இருக்கும் தனியார் காணிகளை விடுவிப்பதாக மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எழுத்து மூலம் உறுதி வழங்கியிருந்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது குறித்து ஆராய்வதற்காக யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அதிபர் தேர்தலுக்கு முன்னர், பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன, வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படையினர் வசம் இருக்கும் தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
அந்த உறுதிமொழிக்கு அமையவே, தற்போதைய அரசாங்கத்துடன் இணங்கிச் செயற்பட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, வலி.வடக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டம் தோல்வியில் முடிந்திருப்பதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
பலாலி விமான நிலைய விரிவாக்கத்தைக் காரணம் காட்டி இந்தக் காணிகளை விடுவிப்பதற்கு படைத்தரப்பு மறுப்புத் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில், காணிகள் விடுவிப்பு தொடர்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும், இந்தக் கூட்டங்களில் தெளிவான முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.