சாதாரணதரத் தேர்வு முடிவுகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் படுமோசம்
அண்மையில் வெளியான கபொத சாதாரண தரத் தேர்வு முடிவுகளில், திருகோணமலை கல்வி வலயத்தைச் சேர்ந்த ஐந்து பாடசாலைகளில் இருந்து எந்தவொரு மாணவரும் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2016 டிசெம்பர் மாதம் நடைபெற்ற கபொத சாதாரண தரத் தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தன.
இந்த தேர்வு முடிவுகளைப் பகுப்பாய்வு செய்த போது, நாடெங்கும் 131 பாடசாலைகளில் இருந்து எந்தவொரு மாணவரும், கபொத உயர் தரம் கற்பதற்குத் தகுதி பெறும் வகையில் தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
கண்டி, காலி, கேகாலை ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த தலா ஆறு பாடசாலைகளில் இருந்தும், களுத்துறை, திருகோணமலை ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த தலா 5 பாடசாலைகளில் இருந்தும், பிலியந்தல, மினுவாங்கொட, குருநாகல, தெகியோவிட்ட கல்வி வலயங்களைச் சேர்ந்த தலா 4 பாடசாலைகளில் இருந்தும் எந்தவொரு மாணவரும் உயர் தரம் கற்கத் தகுதி பெறவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கபொத சாதாரண தரத் தேர்வு, தேர்ச்சியில் மாகாண அடிப்படையில் வடக்கு மாகாணம் எட்டாவது இடத்திலும், கிழக்கு மாகாணம் ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.
2012ஆம் ஆண்டில் இருந்து இந்த இரண்டு மாகாணங்களும் கடைசி இடங்களில் இருந்து வருகின்றன.