Breaking News

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை இந்திய அரசு அங்கீகரிக்க முன்வரவேண்டும் – செ.கஜேந்திரன்



தமிழர்களை வெறும் கருவியாக பயன்படுத்தாமல் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை இந்திய அரசு அங்கீகரிப்பதற்கு முன்வரவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினைவுச் சமாதியில் இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வின்போதே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழர்களின் நலன்களை இந்திய அரசு பேண முற்படுகின்ற போது நாங்களும் இந்திய அரசின் நலன்களுக்கு மதிப்பளித்து அவர்களுடன் ஒத்துழைத்து செயற்பட தயங்கப்போவதில்லை. தமிழர்களை இந்தியா கைவிட்டதினால் அன்று தொடக்கம் இன்றுவரை தமிழர்கள் உரிமைக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த நேரத்திலே எங்கள் உரிமைக்காக எங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி உயிர் நீத்த அன்னைக்கு நினைவு கோர வேண்டிய கடைப்பாடு தமிழர்களாகிய எங்கள் எல்லோருக்கும் இருக்கின்றது” என செல்வராசா கஜேந்திரன் மேலும் தெரிவித்தார்.