மீதொட்டமுல்ல விபத்துக்கு இரசாயன தெளிப்பு காரணம்: பிரதேச மக்கள் சாட்சி
கொழும்பு - மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழும் என்ற அபாயத்தை பிரதேச மக்கள் விபத்து இடம்பெறுவதற்கு ஒருவாரத்திற்கு முன்னரே விடுத்திருந்த போதிலும் அரசாங்கம் அதுகுறித்து பாராமகமாக செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் குப்பை மேட்டில் ஒருவகை இரசாயனம் தெளிக்கப்பட்டதன் விளைவாகவே இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக மீதொட்டமுல்ல பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
புதுவருடப் பிறப்பு தினமான கடந்த 14ஆம் திகதி மாலை 3 மணியளவில் கொழும்பு - மீதொட்டமுல்ல பிரதேசத்தில் பாரிய குப்பை மேட்டு சரிவு அனர்த்தம் இடம்பெற்றது.
இந்த அனர்த்தத்தில் 246 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 59 பேர் பாதிக்கப்பட்டு, அருகிலுள்ள பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 11 பேர் வரை சம்பவத்தில் காயமடைந்த நிலையில் தொடர்ச்சியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுவரை 10 பேர் காணாமல் போயிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இன்றைய ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த விபத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் புதைந்திருக்கலாம் என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் ஆயிரத்து 60 இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் உட்பட முப்படையினர் மீதொட்டமுல்ல அனர்த்தம் ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகளிலும், மக்களின் முறைப்பாடுகளை பதிவு செய்யும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மீதொட்டமுல்ல பகுதியில் குப்பைமேடு சரிவு ஏற்பட்ட பகுதியை அண்மித்த மற்றுமொரு பகுதியும் பாதுகாப்பற்ற பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ளது.
சிவப்புக் கொடிகளை இட்டு குறித்த பகுதிகள் வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளரான பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இந்த அனர்த்தம் தொடர்பான ஆய்வுகளுக்காக பேரதானை பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர்கள் மூவர் உள்ளிட்ட 7 பேரும், அரச இராசாயன பகுப்பாய்வாளர், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவக பிரதிநிதி என பலர் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
விபத்து இடம்பெற்ற தினத்தின் மாலையிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக 5 நாட்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்புப் பணிகளில் இதுவரை 30க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை வெளிநாட்டு தமிழ் ஊடகம் ஒன்று இன்றைய தினம் விபத்து இடம்பெற்ற குப்பை மேட்டுப் பகுதிக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தது.
இதன்போது கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், குப்பை மேட்டின் மீது இரசாயனத் தெளிப்பு மேற்கொள்ளப்பட்டமையே இந்த அனர்த்தம் இடம்பெறுவதற்கான காரணம் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
“எனது பெயர் வி.ஜி குலரத்ன. எனக்கு 55 வயதாகின்றது. இங்கு குடிபெயர்ந்து 32 வருடங்களாகின்றன. அப்போது இங்குவரும்போது வயல்நிலங்களே காணப்பட்டன. அதில் 2 ஏக்கரில் குப்பைகளை கொட்டுவதாக அரசாங்கம் முடிவெடுத்தது. மொத்தமாக 22 ஏக்கரில் குப்பைகளை கொட்டினார்கள். இந்த விபத்து இடம்பெறுவதற்கு 4 வாரங்களுக்கு முன்னர் குப்பை மேட்டின் மீது இரசாயனம் தூவப்பட்டது. அதன் தாக்கத்தினாலேயே விபத்து நேர்ந்திருக்கலாம் என நான் கருதுகிறேன். ஆதன் பின்னர் அருகிலுள்ள வீடுகளின் சுவர்கள் வெடிப்பதற்கு ஆரம்பித்தன” - என்றார்.
இதேவேளை இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 246 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 59 பேர் கொலன்னாவ டெரன்ஸ் த சில்வா மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குத் தேவையான நிவாரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள பாடசாலைக்கும் ஐ.பி.சி தமிழ் செய்திப் பிரிவு இன்றைய தினம் விஜயம் செய்தது.
இதன்போது கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்ட மக்கள், அரசாங்க அதிகாரிகளிடம் இந்த விபத்து இடம்பெறுவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும், ஆனால் அவர்கள் அதனை கிடப்பில் போட்டபடியினால் அனர்த்தம் நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டனர்.