Breaking News

புலிகளுக்கு 20 இலட்சம், சாதாரண மக்களுக்கு ஒரு இலட்சமா? – மஹிந்த அணி ஆவேசம்



யுத்தத்தின்போது இராணுவத்தால் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபாய் நட்டஈடாக வழங்கப்பட வேண்டுமென நீதிமன்றில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாவை வழங்கத் திட்டமிட்டிருப்பது வெட்கத்திற்குரியதென மஹிந்த அணி சாடியுள்ளது.

பொரளையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்தன இவ்வாறு கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்துகொள்வதற்காக முதலில் ஒரு இலட்சம் ரூபாவை வழங்கி, பின்னர் அவர்களுக்கு நியாயமான நட்டஈட்டை வழங்க வேண்டுமென தினேஷ் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, குப்பைகளை கொட்டுவது தொடர்பில் காணப்படும் சட்டங்ளை மீறி கொழும்பு மாநகர சபை செயற்பட்டுள்ளமையே இப் பாதிப்பிற்கு காரணம் எனத் தெரிவித்துள்ள தினேஸ் குணவர்தன, வெறுமனே இதனை அனர்த்தம் என்ற போர்வைக்குள் தள்ளிவிடாமல் முறையான தீர்வை முன்வைக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.