Breaking News

வடக்கில் தமிழ் மருத்துவ நிபுணர்களைவிட சிங்கள மருத்துவ நிபுணர்களே அதிகமாக பணியாற்றுகின்றனர்?

வடக்கு மாகாணத்தில் தமிழ் மருத்துவ நிபுணர்களை விட, சிங்கள மருத்துவ நிபுணர்களே அதிகம் பணியாற்றுகின்றனர். ஆனா லும் 47 மருத்துவ வெற்றிடங்கள் இன்னமும் நிரப்படாத நிலமையே உள்ளதாக, வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் வழங்கியுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.


வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் கடமையாற்றும் தமிழ் மற்றும் சிங்கள மருத்துவர்களின் விவரங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகக் கோரப்பட்டிருந்தன. அதற்கு வழங்கியுள்ள பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்ப தாவது,

மருத்துவ நிர்வாக சேவையில் வடக்கு மாகாணத்தில் 12 வெற்றிடங்கள் இன்னமும் நிரப்பப்படவில்லை. தமிழ் அலுவலர்கள் 9 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களிலும் 4 பேர் தற்காலிக இணைப்பில் உள்ளனர். சிங்கள அலுவலர் ஒருவரே பணிபுரிகின்ற நிலையில் அவரும் தற்காலிக இணைப்பிலேயே கடமையாற்றுகின்றார்.

மருத்துவ நிபுணர்களுக்கு வடக்கில் 47 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. தமிழ் அலுவலர்கள் 28 பேரே பணிபுரிகின்றனர். சிங்கள அலுவலர்கள் 41 கடமையாற்றுகின்றனர். மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான 205 வெற்றிடமும் இன்னமும் பூர்த்தியாக்கப்படவில்லை. 289 தமிழ் அலுவலர்கள் பணிபுரிகின்ற அதேவேளை 157 சிங்கள அலுவலர்கள் வடக்கில் கடமையாற்றுகின்றனர்.

பல் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் 17 காணப்படுகின்றது. தமிழ் அலுவலர்கள் 62 பேரும், சிங்கள அலுவலர்கள் 8 பேரும் பணிபுரிகின்றனர். இதில் வவுனியா மாவட்டத்தில் 19 தமிழ் அலுவலர்களும், 2 சிங்கள அலுவலர்களும் கடமையாற்றுகின்றனர். அந்த மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட வெற்றிடத்தை விட 6 அலுவலர்கள் அங்கு மேலதிகமாக பணியாற்றுவதாக வழங்கிய தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இதில், கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் மருத்துவ நிபுணர்கள், மருத்துவ உத்தியோகத்தர்கள், பல் மருத்துவ உத்தியோகத்தர்கள் விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை என்று தகவல் வழங்கும் அலுவலர் குறிப்பிட்டுள்ளார்.