‘கஜபா’க்களின் அதிபதியாகிறார் போர்க்குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா
சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் பொது உதவி அதிகாரியாக பணியாற்றும் சர்ச்சைக்குரிய அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கஜபா காலாட்படைப் பிரிவின் தலைமை கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளார்.
கஜபா படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரியாக பணியாற்றும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா இந்தவாரம் ஓய்வு பெறவுள்ளார்.
இதையடுத்தே, கஜபா படைப்பிரிவின் புதிய தலைமை கட்டளை அதிகாரி பதவிக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர் என்று மனித உரிமை அமைப்புகளால் குற்றம்சாட்டப்பட்டு வருபவராவார்.
அண்மையில் சிறிலங்கா இராணுவத் தளபதியின் பொது உதவி அதிகாரியாக அவருக்கு நியமனம் வழங்கப்பட்டமையானது, அனைத்துலக மட்டத்தில் கடுமையான சர்ச்சைகளையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் அவருக்கு மற்றொரு உயர்பதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.