ஐந்து நாட்கள் பயணமாக செவ்வாயன்று புதுடெல்லி செல்கிறார் ரணில்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐந்து நாட்கள் பயணமாக வரும் 25ஆம் நாள் இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். எனினும், ஒரே ஒரு நாள் மாத்திரமே இந்திய அரசாங்கத் தலைவர்களுடன் அவர் அதிகாரபூர்வ பேச்சுக்களில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வு ஒன்றுக்காகவே ரணில் விக்கிரமசிங்க ஐந்து நாட்கள் பயணமாக வரும் 25ஆம் நாள் இந்தியா செல்லவுள்ளார். எனினும், வரும் 26ஆம் நாள் புதுடெல்லியில் அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
சிறிலங்கா பிரதமருக்கு இந்தியப் பிரதமர் மதியபோசன விருந்தும் அளித்து கௌரவிப்பார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன் அன்றைய நாள், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரையும் சிறிலங்கா பிரதமர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்ச்சியான எமது உயர்மட்ட தொடர்பாடலின் ஒரு அங்கமாகவே சிறிலங்கா பிரதமரின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா பிரதமரின் இந்தப் பயணத்தின் போது, திருகோணமலைத் துறைமுக அபிவிருத்தி குறித்த புரிந்துணர்வு உடன்பாட்டின் ஊடாக, எண்ணெய்த் தாங்கிகளை செயற்படுத்தல், இயற்கை எரிவாயு மின் திட்டத்தை உருவாக்கல், நெடுஞ்சாலைகள் அமைத்தல், மற்றும் கைத்தொழில் வலயங்களை உருவாக்குதல் ஆகியன குறித்த இறுதிக்கட்டப் பேச்சுக்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், எட்கா உடன்பாடு குறித்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்தமாதம் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணம் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.
இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு சிறிலங்கா பிரதமர் எதிர்வரும் 29ஆம் நாள் நாடு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.