Breaking News

சிறிலங்கா படையினர் தண்டிக்கப்பட வேண்டும் – ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர்

ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட சிறிலங்கா படையினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.


ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய சிறிலங்கா படையினர் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியிருந்த அசோசியேட்டட் பிரஸ், இந்தக் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய சிறிலங்கா படையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியிருந்தது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹாலே,

“ஐ.நா அமைதி காப்புப் பணிக்கு  படையினரை வழங்கியுள்ள எல்லா நாடுகளும், தமது படையினரின்  பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு  பொறுப்புக்கூற வேண்டும்.

தமது படையினரைப் பொறுப்புக்கூற வைக்க மறுக்கும் நாடுகளின் பங்களிப்பை நிறுத்த வேண்டும், அவர்களின் படையினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், அவர்களுக்கான நிதி இழப்பீடுகளும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

இந்தக் குழந்தைகளுக்கு நாம் எதைச் சொல்ல முடியும்? இந்த அமைதிகாப்பாளர்கள் அவர்களைப் பாதுகாத்தனரா?

ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படைக்குப் பங்களிப்புச் செய்த நாடுகள், தமது படையினரைப் பொறுப்புக்கூற வைக்க வேண்டும் என்று நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். மற்ற நாடுகளும் எம்முடன் ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.