Breaking News

இறக்காமம் மாணிக்கமடு விவகாரம் தொடர்பில் சாதகமான நிலை: கிழக்கு முதலமைச்சர்



அம்பாறை இறக்காமம் மாணிக்கமடு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது பல்வேறு சாதகமான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், மாணிக்கமடு மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர்,

“இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி மலையை அண்டிய பகுதியில் உள்ள சிறுபான்மையினரின் காணி உறுதிகள் உட்பட்ட சில ஆவணங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

அத்துடன் கிழக்கில் காணப்படும் சிறுபான்மையினரின் காணி ஆக்கிரமிப்புக்கள், அத்துமீறல்கள் தொடர்பிலும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளார். இதனையடுத்து மாணிக்கமடு விவகாரம் தொடர்பில் கிழக்கின் ஆளுனர் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடமும் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன், இதன் போது அவர்களுக்கு ஜனாதிபதி பல சாதகமாக பணிப்புரைகளையும் விடுத்துள்ளார்” என அவர் மேலும் தெரிவித்தார்.