Breaking News

அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க முடியாது; டி.எம்.சுவாமிநாதன்



அரசியல் கைதிகளை விடுப்பதற்கு அரசாங்கத்தில் சட்ட ரீதியான முறையொன்று உள்ளதாகவும் இதன் அடிப்படையிலேயே செயற்பட முடியும் எனவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கைதிகள் தங்கள் விடுவிப்பு தொடர்பில் மனுக்களை அளித்துள்ளதாகவும் இதுகுறித்து சட்ட ரீதியாக ஆராய்ந்த பின்னரே அவர்களை விடுவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி சபையினால் அமைக்கப்பட்ட கற்பகசோலை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நிலையம், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் ஆகியோர் இணைந்து இன்றைய தினம் 10.30 அளவில் திறந்து வைத்தனர்.

இதன்பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள 399 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்,

கேப்பாப்புலவிலுள்ள இராணுவத்தின் கட்டிடங்களை அகற்றி, வேறு இடங்களுக்கு செல்வதற்காக இராணுவத்தினர் அரசாங்கத்திடம் நிதியுதவி கோரியுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டிக்கொடுக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், 

76 ஆயிரம் பொருத்து வீடுகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் முதலில் 6 ஆயிரம் வீடுகளை அமைக்க உள்ளதாகவும் அதுபிடித்திருக்கும் பட்சத்தில் மேலதிக வீடுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.