Breaking News

நாளை கொழும்பு வருகிறார் பிரித்தானிய அமைச்சர் – திடீர் தேர்தலால் அழுத்தங்கள் குறையலாம்?



ஆசிய –பசுபிக் பிராந்தியத்துக்கான பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக அமைச்சர் அலோக் சர்மா நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மெற்கொள்ளவுள்ளார்.

வரும் சனிக்கிழமை வரை அவர் சிறிலங்காவில் தங்கியிருப்பார் என்று கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பிரித்தானிய அமைச்சர் அலோக் சர்மா வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் “பிரெக்சிற்குப் பிந்திய உலகில் சவால்களும் வாய்ப்புகளும்” என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாத அமர்வில் பிரித்தானியா சார்பில் பங்கேற்றிருந்த அலோக் சர்மா, வழங்கப்படும் கால அவகாசத்துக்குள் ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இதனால், ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு அவர் அழுத்தங்களைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், பிரித்தானியப் பிரதமர் தெரெசா மே நேற்று திடீரென நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2020 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய தேர்தலை அவர் முன்கூட்டியே வரும் ஜூன் 8ஆம் நாள் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதனால், பிரித்தானியாவின் அமைச்சர் அலோக் சர்மாவின் சிறிலங்கா பயணத்தின் முக்கியத்துவம் குறைவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.