Breaking News

தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீண்டும் வருவார்கள்

இந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கினால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார்கள். அதுதான் எங்களுக்கு தற்போது இருக்கின்ற ஒரு சஞ்சலம் என தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோனாதிராஜா தெரிவித்துள்ளார். 


62 நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்களை  நேற்று(22) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

நாங்கள் அரசாங்கம் அல்ல. அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள். மக்களின் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் தீர்வு காணவேண்டும் என்பதற்காகவே அரசாங்கத்திற்கு வாக்களித்தோம். ஆனால் அந்த விடயங்கள் எவையும் நடைபெறவில்லை. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை என்றால் அது நல்லாட்சி அரசாக இருக்க முடியாது. கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் இனியும் இடம்பெற கூடாது என மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 

காணாமல் போனவர்களின் விடயம் தொடர்பில் இரண்டு வாரங்களில் தீர்வு ஒன்றை பெற்றுத் தர முயற்சி செய்வதாகவும், வரும் இரண்டு அல்லது மூன்றாம் திகதிகளில் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் பல பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாகவும், அதன் போது காணாமல் போனவர்களின் உளவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாவும் குறிப்பிட்டார் மாவை சேனாதிராஜா. 

மேற்குலக நாடுகள் இந்த அரசாங்கத்திற்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று எங்களோடும் பேச்சுவார்த்தை நடத்திதான், அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்கினார்கள். மாறாக சர்வதேச சமூகசத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்க முடியாது என்று சொன்னால் நாங்கள் அவர்களிடமிருந்து தனிமைப்பட்டுவிடுவோம். நாங்கள் ஒரு அரசியல் கட்சி. நாடு அல்ல. ஆகவே இதில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். 

சர்வதேச சமூகத்தோடு சேர்ந்து நாங்கள் ஒன்றாக பயணித்தால்தான் இந்த அரசாங்கம் எங்களை கைவிட்டாலும் சர்வதேச சமூகம் எங்களை கைவிடாது. எனவே நாங்கள் சர்வதேச சமூகத்தோடு இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம். எனவே தான் நாங்கள் சர்வதேச சமூகத்தோடு இணங்கி நிற்க விரும்புகின்றோம்.