இன்னொரு பெயரில் தயாராகிறது பயங்கரவாத தடுப்பு சட்டம்
கடந்த காலத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் தவறான வகையில் கையாளப்பட்டுள்ளது என்பதே உண்மையான காரணியாகும். புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் பயங்கரவாத தடுப்பு மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் என்ற இரண்டு விடயத்தின் சமநிலைத்தன்மையும் உருவாக்கப்படும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
நாட்டின் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் என்ற அரசாங்கத்தின் வாக்குறுதிகளுக்கும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை கிடைக்கவுள்ளமைக்கும் எந்தவித தொடர்புகளும் இல்ல. எனினும் நல்லிணக்கத்தை பலப்படுதுவன் மூலம் ஜி. எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்கும் வழிமுறை மேலும் உறுதிப்படுத்தப்படும்.
மேலும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் மாறப்போகின்றது எனவும் சர்வதேச தேவைக்காக வேலைத்திதிட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் சிலர் இன்று பேசுகின்றனர். உண்மையில் பயங்கரவாதமானது இலங்கைக்கும் ஏனைய ஒரு சில நாடுகளுக்கும் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட ஒரு செயற்பாடு அல்ல. இன்று மேற்கத்தேய நாடுகள் பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை உணர ஆரம்பித்துள்ளன. நாம் கடந்த முப்பது ஆண்டுகளில் எதிர்கொண்ட அனுபவங்கள், எமது மக்கள் அனைவரும் எதிர்கொண்ட பிரச்சினைகள் தொடர்பில் அவர்களும் உணர ஆரம்பித்துள்ளனர். சர்வதேச தரப்பில் இந்த உண்மைகளை நாம் வெளிப்படுத்தி வருகின்றோம். இன்று சர்வதேச நாடுகளுக்கு இலங்கை நல்லதொரு முன்னுதாரண நாடாக மாறியுள்ளன.
ஒருபுறம் மனித உரிமைகளை பாதுகாக்கும் அதே நிலையில் மறுபுறம் பயங்கரவதத்தை கட்டுப்படுத்தவும் வேண்டும். இரண்டையும் சரியாக கையாண்டால் மாத்திரமே பிரச்சினைகளை சமாளிக்க முடியும். ஆகவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் இந்த சமநிலைத்தன்மை உருவாக்கப்படும். அதற்கான முயற்சிகளையே நாம் மேற்கொண்டு வருகின்றோம். கடந்த காலத்தில் பயங்கரவாத தடுப்பு சட்டம் தவறான வகையில் கையாளப்பட்டுள்ளது என்பதே உண்மையான காரணியாகும்.
இலங்கை சர்வதேச தரப்பிடம் கொடுத்த வாக்குறுதிக்கும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்தமைக்கும் தொடர்புகள் உள்ளதா என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.