இம்முறையும் ஏமாற்றிவிடவேண்டாம் -ரொபட் அன்டனி
ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலை மையை காரணம் காட்டி தமிழ் பேசும் மக் களுக்கான தீர்வுத் திட்டத்தை குழப்பியடித்து விடக்கூடாது. மக்களுக்கான நீதி மற்றும் ஏனைய பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கையில் நீண்ட கால விவகாரமான அரசியல் தீர்வு செயற் பாட்டில் அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். சுய அரசியல் இலாபங்களை நோக்காக கொண்டு புதிய அரசியலமைப்பு விடயத்திலும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்திலும் எந்தவொரு தரப்பும் செயற்பட்டு விடக்கூடாது
நாட்டின் அரசியல் நகர்வுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் காய் நகர்த்தல்கள் என்பன பாரிய பரபரப்பான நிலைமையை அடைந்து வருகின்றன என்றே கூறலாம். ஒருபுறம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமது அரசாங்கத்தை கட்டிக் காப்பதற்காக பாரிய அரசியல் நகர்வுகளை முன்னெடுத்துள்ள நிலையில் மறுபுறம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இழந்த ஆட்சியை மீண்டும் பிடிப்பதற்காக முயற்சித்து வருகிறார்.
அதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான அதிகாரப் போட்டியும் முரண்பாடுகளும் பாரியளவில் தலைதூக்கியுள்ளன. அவர்களுக்கிடையிலான பிரச்சினைகளும் தினந்தோறும் அதிகரித்து செல்கின்றன. இது இவ்வாறிருக்க யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டில் அரசாங்கத்திற்கும் தமிழர் தரப்புக்குமிடையில் முரண்பாடுகளும் தோற்றம் பெற்றுள்ளன.
இதுஇவ்வாறிருக்க பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் முரண்பாடுகளும் பிரச்சினைகளும் என்றுமில்லாத வாறு தோற்றம் பெற்றுள்ளன. மேலும் கூட்டு எதிரணியும் அரசாங்கத்திற்கு எதிரான நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறு நாட்டின் அரசியல் நகர்வுகளானவை பெரும் சூடுபிடிப்பதாகவும் பரபரப்பாகவுமே இடம்பெற்று வருகின்றன.
ஒரு நாட்டின் அரசியலை பொறுத்தவரையிலும் அரசியல் கட்சிகளை பொறுத்தவரையிலும் முரண்பாடுகளும் உட்பூசல்களும் பிரச்சினைகளும் தோன்றுவது இயல்பானதாகும். ஆனால் எமது நாட்டைப்பொறுத்தவரையில் இந்த நிலை சற்று அதிகமாகவே காணப்படுகின்றது.
அதாவது பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பு நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் அது தொடர்பான சர்ச்சைகளும் மறுபுறம் நீண்டகாலப் பிரச்சினையான அரசியல் தீர்வு விவகாரமும் தீர்க்கப்படாத நிலையிலேயே எமது நாட்டின் அரசியல் பரபரப்பில் முக்கியத்துவம் ஏற்படுகின்றது.
அந்தவகையில் பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமானது நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு ஒன்றினை பெற்றுக் கொடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்ததுடன் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
அதற்காகவே பாராளுமன்றம் அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டு பிரதான வழிநடத்தல் குழுவும் உபகுழுக்களும் நியமிக்கப்பட்டன. இந் நிலையில் அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளும் தடல்புடலாக முன்னெடுக்கப்பட்டன.
அரசியலமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிவதற்காக மக்கள் கருத்தறியும் குழுவும் நியமிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையும் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. மக்கள் கருத்தறியும் குழுவானது இரண்டாவது கட்ட நடவடிக்கைகளையும் ஆரம்பித்திருக்கிறது.
இந் நிலையில் அரசியலமைப்பு நிர்ணய சபையின் கீழ் நியமிக்கப்பட்ட பிரதான வழிநடத்தல் குழுவானது தேர்தல் முறை மாற்றம், ஜனாதிபதி முறைமை மாற்றம் மற்றும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஆகிய மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறது. அதன் கீழ் நியமிக்கப்பட்டுள்ள ஆறு உபக்குழுக்கள் ஏனைய விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறது. அந்தக் குழுக்கள் தமது அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன.
அந்த வகையில் புதிய அரசியலமைப்பு குறித்த முதலாவது நகல் வரைவு இவ் வருடம் மார்ச் மாதம் அளவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அவ்வாறு நடக்கவில்லை. இந்த நிலையிலேயே தற்போது புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் பாரிய முரண்பாடுகளும் தேக்க நிலைமைகளும் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்கான விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதா? - -இல்லையா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க தற்போது புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதா அல்லது. அரசியலமைப்பு திருத்தத்தை முன்னெடுப்பதா என்பது தொடர்பிலேயே சிக்கல்கள் ஆரம்பித்துள்ளன.
அதாவது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது புதிய அரசியலமைப்பு வேண்டாம் என்றும் அரசியலமைப்பு திருத்தமே போதுமானது என்றும் வலியுறுத்தி வருகிறது. அத்துடன் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றியமைப்பதற்கு சுதந்திரக் கட்சி விரும்பவில்லை. அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியானது புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியல் தீர்வுடன் கூடிய புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அது சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்து வருகிறது. கூட்டு எதிரணியானது புதிய அரசியலமைப்பு தேவையில்லை என்றும் அதற்கான அவசியம் எழவில்லை என்றும் கூறிவருகிறது. இவ்வாறான நிலையிலேயே புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்ச்சைக்குரிய நிலைமை தோன்றியுள்ளது.
இந் நிலைமை ஏன் உருவானது என்பதற்கான பின்னணியை நாம் ஆராய வேண்டியது அவசியமாகும். உண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படும் எந்தவொரு திருத்தத்தையும் முன்னெடுக்கப் போவதில்லை என அவர் உறுதியளித்திருந்தார். எனினும் அதன்பின்னர் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் புதிய அரசியலமைப்பினை கொண்டுவருவதாக ஐக்கிய தேசியக் கட்சி வாக்குறுதி அளித்தது. எனினும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு பிரதான கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களையும் தேர்தலில் பெற்றுக் கொண்டன. அந்த வகையில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததன் காரணமாக இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்தன.
இந்த நிலையில் தற்போது புதிய அரசியலமைப்பு தொடர்பான விடயங்களில் முரண்பாடு எற்பட்டுள்ளது. அதாவது புதிய அரசியலமைப்பு வேண்டாம் என்றும் அரசியலமைப்பு திருத்தமே போதுமானது என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்திக் கூறுவதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதாவது தற்போதைய நிலைமையில் புதிய அரசியலமைப்பினை கொண்டுவருவதாக வாக்குறுதி வழங்கிய ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
எனவே புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு எந்தவொரு அரசியல் கட்சிக்கும் மக்களின் ஆணை கிடைக்கவில்லை. ஆகையால் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதை விடுத்து திருத்தம் மட்டுமே கொண்டு வரவேண்டும்.
மேலும் தேர்தல் முறை மாற்றத்திற்கும் இனப்பிரச்சினை தீர்வுக்கும் சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனவே இந்த இரண்டு விடயங்களையும் அரசியலமைப்பு திருத்தங்களாக முன்வைத்து அவற்றை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ள முடியும். எனவே புதிய அரசியலமைப்புக்கு செல்லாமல் திருத்தத்திற்கு செல்வதே மேலானதாகும்.
புதிய அரசியலமைப்பினை உருவாக்கி, அதற்காக சர்வஜன வாக்கெடுப்பினை நடத்தி, அது தோல்வியை தழுவினால் அதனூடாக தேர்தல் முறை மாற்றத்தையும் அரசியல் தீர்வையும் கூட அடைந்து விட முடியாத நிலைமை ஏற்படும்.
இவ்வாறு சுதந்திரக் கட்சியானது புதிய அரசியலமைப்பு வேண்டாம் என்பதற்கான விளக்கத்தினை அளித்து வருகிறது. இவ்வாறான வகையிலேயே தற்போது புதிய அரசியலமைப்பு குறித்த முரண்பாடுகளும் சர்ச்சைகளும் தோற்றம் பெற்றுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான ஆர்வம் காணப்பட்டாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது.
எனவே இரண்டு கட்சிகளும் இணைந்து இணக்கப்பாட்டிற்கு வருவதனூடாகவே புதிய அரசியலமைப்பு தொடர்பான தீர்மானத்திற்கு வரமுடியும். அதனைவிடுத்து இரண்டு கட்சிகளும் இவ்வாறு தொடர்ந்து முரண்பட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
அரசாங்கத்தை பொறுத்தவரை புதிய அரசியலமைப்பினை கொண்டு வந்து தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும். இந்த விடயத்தில் தொடர்ந்தும் இழுத்தடிப்புக்களை செய்து கொண்டிருக்க கூடாது.
தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரையில் ஒரு நியாயமான அரசியல் தீர்வுக்காக நீண்டகாலமாக போராடி வருகின்றனர். அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்கான கடந்த கால போராட்டங்கள் பல்வேறு வடிவங்களை பெற்றிருந்த போதும் அவை வெற்றி பெறவில்லை. மக்கள் தொடர்ந்தும் அரசியல் தீர்வுக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இந் நிலையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்ற நம்பிக்கை மேலோங்கியது. அதாவது புதிய அரசாங்கத்தில் இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளதன் காரணமாக அரசியல் தீர்வானது சாத்தியமாகும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.
காரணம் கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருக்கும்போது அரசியல் தீர்வு முயற்சியை சுதந்திரக் கட்சி எதிர்ப்பதும் சுதந்திரக் கட்சி ஆட்சியில் இருக்கும்போது அரசியல் தீர்வு முயற்சியை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பதுமாக நிலைமை நீடித்திருந்தது. ஆனால் தற்போது இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சியமைத்துள்ளதால் நீண்டகால இனப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வை காண்பதற்கு சாதகமான நிலைமை தோன்றியுள்ளது.
எனினும் அந்த நிலைமையிலும் கூட முரண்பாடுகளும் சர்ச்சைகளும் பிரச்சினைகளும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. காரணம் என்னதான் இரண்டு பிரதான கட்சிகளும் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் இணைந்து ஆட்சி அமைத்தாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று வரும்போது இரு வேறுபட்ட நிலைமையில் இரண்டு கோணங்களில் இருந்து செயற்படுவதையே அவதானிக்க முடிகிறது.
இந்த நிலைமையே தற்போது புதிய அரசியலமைப்பு விடயத்தில் நாம் காண்கிறோம். வேறு அனைத்துக் காரணங்களை விடவும் புதிய அரசியலமைப்பானது அரசியல் தீர்வு என்ற அடிப்படையில் தமிழ் பேசும் மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகிறது.
அதற்காகவே பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இராஜதந்திர ரீதியிலும் சாணக்கியமான அரசியல் போக்கிலும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டை கொண்டுள்ளது. அது ஒரு வகையில் ஒரு ஆபத்தான அரசியல் தீர்மானமாகவும் கூட்டமைப்புக்கு அமையலாம்.
அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை கூட்டமைப்பு எடுத்துள்ள நிலையிலும் அரசாங்கமானது இந்த விடயத்தில் அக்கறையுடன் செயற்படாவிடின் அது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற மிகப் பெரிய துரோகமாக அமைந்து விடும். புதிய அரசாங்கம் தமக்கு முழுமையான தொரு அரசியல் தீர்வை வழங்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே தமிழ் பேசும் மக்கள் புதிய அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கியிருந்தனர்.
எனினும் புதிய அரசாங்கமும் கடந்த கால வரலாற்றை நிரூபிப்பதைப் போன்றே செயற்பட்டு வருகின்றது. எந்தவொரு வகையிலும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதில் அக்கறை காட்டுவதாக இல்லை. தொடர்ந்தும் பிரச்சினைகளை இழுத்தடித்துக் கொண்டு செல்வதிலேயே அக்கறை காட்டப்படுகிறது. மாறாக இந்த விடயத்தில் அரசாங்கம் அக்கறையுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வுத் திட்டமொன்றை விரைவில் அரசாங்கம் முன்வைக்க வேண்டும். புதிய அரசியலமைப்பினூடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு அதற்கு நாட்டின் சகல மக்களினதும் ஆதரவு பெறப்பட வேண்டும். அதனூடாகவே தமிழ் பேசும் மக்களுக்கு நீதியான தீர்வை வழங்க முடியும்.
இந்த விடயத்தில் நாட்டின் அனைத்துக் கட்சிகளுக்கும் பாரிய பொறுப்பும் கடமையும் உள்ளது. அதனை உதாசீனப்படுத்தி எந்தவொரு கட்சியும் செயற்பட முடியாது. அரசாங்கம் இந்த விடயத்திற்கு தீர்வை வழங்குவதாக கூறியே மக்களின் ஆணையை பெற்று பதவிக்கு வந்துள்ளது. எனவே அந்த விடயத்தில் அரசாங்கம் அர்ப்பணிப்பை காட்ட வேண்டியது அவசியமாகும்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இந்த செயற்பாட்டில் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மக்களின் தேவையை அறிந்து அக் கட்சி செயற்பட வேண்டியது அவசியமாகின்றது. மேலும் மஹிந்த ராஜபக் ஷ அணியினரும் தமிழ் பேசும் மக்களின் நீண்டகாலப் பிரச்சினை தொடர்பில் தூரநோக்குடன் சிந்தித்து செயற்பட வேண்டும். தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பாரிய பொறுப்புகள் உள்ளன.
புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமையை காரணம் காட்டி தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தை குழப்பியடித்துவிடக்கூடாது. மக்களுக்கான நீதி மற்றும் ஏனைய பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கையில் நீண்டகால விவகாரமான அரசியல் தீர்வு செயற்பாட்டில் அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். சுய அரசியல் இலாபங்களை நோக்காக கொண்டு புதிய அரசியலமைப்பு விடயத்திலும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்திலும் எந்தவொரு தரப்பும் செயற்பட்டு விடக்கூடாது என்பது இங்கு முக்கியமானதாகும்.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்