நெடுந்தீவு சிறுமி கொலை சந்தேக நபருக்கு மரண தண்டனை
நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி என்ற சிறுமி பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்ற சந்தேக நபருக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமி, வீட்டில் இருந்து நெடுந்தீவு சந்தைக்கு மீன் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்ற போது கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்.
அத்துடன் சிறுமி கல்லால் அடித்தும் கொலை செய்யப்பட்டார். குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்ற நபர், நெடுந்தீவு பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.
இது தொடர்பான சாட்சியப் பதிவுகள் நேற்று வியாழக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. இதன்போது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திக் கொலை செய்தமைக்காக குற்றவாளியான கந்தசாமி ஜெகதீஸ்வரனுக்கு நீதிபதி, மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன், 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதித்ததுடன் அதனை கட்டத் தவறினால் ஒரு வருட சிறைத்தண்டனையும் நீதிபதி விதித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கவேண்டும் எனவும் அதனை கட்டத்தவறினால் 5 வருட சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
இதன்போது கொலைக் குற்றத்துக்கு மரண தண்டனையும், பாலியல் வன்புணர்வுக்குற்றத்துக்கு 20 வருட கடூழீய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.