சுய பரிசோதனைக்கு கூட்டமைப்பு தயாரா? -கபில்
மன்னிப்புச் சபையின் பொதுச்செயலர் சலில் ஷெட்டி கடந்த புதன்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, இலங்கை அரசாங்கத்துக்கு காலம் கடந்து கொண்டிருக்கிறது என்று கூறியிருந்தார்.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதாக, சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கே காலம் கடந்து கொண்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
காலம் கடந்து கொண்டிருக்கிறது என்ற இந்தக் கூற்று, இலங்கை அரசாங்கத்துக்கு மாத்திரம் பொருத்தமானதல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கூட பொருத்தமானது தான்.
இலங்கை அரசாங்கம் நாட்டு மக்களுக் கும் சர்வதேச சமூகத்துக்கும் வாக்குறுதிகளை அளித்துள்ளது போலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்களிடம் வாக்குறுதிகளை அளித்திருக்கிறது.
தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத் தருவதாக - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுத்திருந்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதற்குள்ளாகவே பாராளுமன்றத் தேர்தல் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிக் கொண்டிருக்கின்றன.
அடுத்த பாராளுமன்றத் தேர்தல் இன்னும் நான்கு ஆண்டுகளில் வரப் போகிறது. அதற்கு முன்னதாக, உள்ளூராட்சித் தேர்தல் இந்த ஆண்டில் நடத்தப்படவுள்ளது. கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலும், வரும் செப்டெம்பருக்குள் நடத்தப்பட வேண்டும். அதற்குப் பின்னர், வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துக்குள் நடத்தப்படும்.
இவ்வாறாக அடுத்த ஆண்டுக்குள் மூன்று தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தத் தடைகளைத் தாண்டிப் பயணம் செய்வது ஒன்றும் சுலபமான காரியமாக இருக்கப் போவதில்லை.
ஏனென்றால், ஏற்கனவே தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் நிலை என்ன என்பது இந்த தேர்தல்களில் முக்கியமான கேள்வியாக இருக்கப் போகிறது. அதனால் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மேற்கூறிய கூற்று பொருத்தமானது என்று குறிப்பிடப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வெறுமனே ஓர் அரசியல் கட்சியாக இருந் தால், கடந்த தேர்தலின் போது அளித்திருந்த வாக்குறுதியையிட்டு கவலை கொள்ள வேண்டிய தேவை இருக்காது. ஏனென்றால் பெரும்பாலான அரசியல் கட்சிகள், தேர்தல்களின் போது அளிக்கும் வாக்குறுதிகளை அப்போதே மறந்து விடு வது தான் வழக்கம்.
அடுத்த தேர்தலின் போது தான், அவர்களுக்கே அந்த வாக்குறுதிகள் நினைவுக்கு வரும். அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எடுக்க முடியாது. ஏனென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலாப நோக்கிற்காக செயற்படுகின்ற மக்களின் நலன்களை மறந்து விட்டுச் செல்லக்கூடிய ஓர் அரசியல் கட்சி அல்ல.
இது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும், உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பு. அதனால் தான், கூட்டமைப்பினால் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மறந்து விட்டுச் செல்லவோ கடந்து கொண்டு செல்லவோ முடியாது.
ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த தேர்தலின் போது அளித்திருந்த வாக்குறுதிகளை எந்தளவுக்கு நிறைவேற்றியுள்ளது என்பது குறித்து தமிழ் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய கடப்பாடு அடுத்து வரும் தேர்தல்களின் போது, ஏற்படும்.
அடுத்து வரப் போகின்ற தேர்தல்களை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தளவுக்குத் தயார்படுத்தல்களை மேற்கொள்கின்றது என்ற கேள்விகள் நிறையவே இருக்கின்றன. இன்னும் நான்கு ஆண்டுகளில் வரப் போகின்ற ஜனாதிபதி தேர்தல் பற்றி இப் போதே ஐ.தே.க.வும், ஸ்ரீலங்கா சுதந்தி ரக் கட்சியும், ஜே.வி.பியும் யோசிக்கத் தொடங்கி விட்டன.
இந்தியாவில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் வரப்போகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்காக பா.ஜ.க. கடந்த ஆண்டிலேயே வியூகம் வகுத்துச் செயற்படத் தொடங்கி விட்டது.
இவ்வாறான நிலைமைகளுடன் ஒப்பிடும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பு, அடுத்த தேர்தல்களை எதிர்கொள்ளும் விடயத்தில் அப்படியொன்றும் தீர்க்க தரிசனத்துடன் முடிவுகளை எடுத்திருப்பதாகவோ வியூங்களை வகுத்திருப்பதாகவோ தெரியவில்லை.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான குறைந்தபட்ச நிகழ்ச்சி நிரல் ஒன்று கூட கூட்டமைப்பிடம் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நிறைந்திருப்பதெல்லாம், உள்ளக முரண்பாடுகளும், குத்துவெட்டுகளும் தான்.
இந்த நெருக்கடியைக் கடந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு நகரப் போகிறது என்ற கேள்விகள் தமிழ் அரசியல் பரப்பில் எழுந்திருக்கின்றன. ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டே, அதன் தலைமைக்கு எதிராக குரல்கள் எழுப்பப்படுகின்றன. இன்னொரு பக்கத்தில் வெளியில் இருந்து கொண்டு கூட்டமைப்பை உடைக்கும் முயற்சிகள் நடக்கின்றன.
இவை எல்லாவற்றுக்கும் அப்பால் வடக்கிலும் கிழக்கிலும் காலூன்றுவதற்கு பேரினவாத தேசியக் கட்சிகள் பெரும் முனைப்பில் ஈடுபட்டிருக்கின்றன. மூன்று விதமான இந்த நெருக்கடிகளுக்கு அப்பால், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அணுகுமுறைகளையும், அதற்கான வழிமுறைகளையும் கையாள வேண்டிய நிலையும் கூட்டமைப்புக்கு இருக்கிறது.
அண்மையில் ஜெனீவா தொடர்பாக ஏற்பட்ட நெருக்கடியை கூட்டமைப்பு ஒருவாறு சமாளித்து விட்டது. ஆனால் இது நிரந்தரமான தீர்வு அல்ல. ஜெனீவா காலஅவகாசம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிலையானதொரு தீர்மானத்தை எடுக்கவில்லை.
முதலில் காலஅவகாசம் வழங்கப்படுவதை ஆதரிப்பதாக கூறியது, பின்னர் காலஅவகாசத்தை ஆதரிப்பதாக கூறவில்லை என்றது, கடைசியாக ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேறியதும், காலஅவகாசம் அளிக்கப்பட்டதை வரவேற்று அறிக்கை வெளியிட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதற்காக இவ்வாறு குட்டையைக் குழப்பி மீன்பிடிக்க முனைகிறது என்ற கேள்வி தமிழ் மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது. ஜெனீவா விடயத்தில் அரசாங்கமும், மேற்குலகமும் போட்ட வரைவு ஒன்றின் கீழ்தான் எல்லாமே நடந்தன. ஜெனீவாவில் காலஅவகாசம் அளிப்பதை விட சர்வதேச சமூகத்துக்கு இன்னொரு தெரிவு இருக்கவில்லை. இது தான் உண்மை நிலை.
அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலஅவகாசம் வழங்குவதற்கோ, வழங்கப்பட்டதற்கோ ஆதரவு தெரிவித்திருக்க வேண்டுமா என்பது தான் தமிழ் மக்களின் கேள்வி. ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு இணங்கியதை வரவேற்றிருக்கலாம். அவ்வாறு வரவேற்பதற்கும், காலஅவகாசம் வழங்கப்பட்டதை வரவேற்றதற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன.
ஜெனீவா விவகாரத்தில் எதையும் செய்ய முடியாது என்பதைத் தெரிந்து கொண்ட தமிழ்த் தேசியவாத தரப்புகள், அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான விடயமாக திசை திருப்பி விட்டன. தமிழ் மக்களின் கையறு நிலை மறைக்கப்பட்டு அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கையாலாகாத்தனமாக காட்டுவதில் சில தரப்புகள் வெற்றியைப் பெற்றிருக்கின்றன.
இப்படியொரு நிலை ஏற்பட்டமைக்கு கூட்டமைப்புக்குள் நிலவுகின்ற உள்ளக முரண்பாடுகள் பெரிதும் வலுச் சேர்த்திருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு அளவுக்கு அதிகமாகவே முண்டு கொடுக்கிறது என்ற அதிருப்தி தமிழ்மக்களிடம் ஏற்பட்டுள்ளது என்றால், அதற்குக் காரணம் கூட்டமைப்பின் அணுகுமுறை தான்.
இந்த அதிருப்தி நிலை நீடிக்குமானால், அது தமிழ் மக்களின் கடுமையான எதிர்வினைகளுக்கே வழிவகுக்கக் கூடும். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்காக கடுமையாக உழைத்தவர்கள், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் சலித்துக் கொண்டு இப்படித் தான் கூறினார்கள் “கூட்டமைப்பு தும்புத்தடியை வேட்பாளராக நிறுத்தினாலும் தமிழ் மக்கள் வீட்டுக்குத் தான் வாக்குப் போடுவார்கள்”.
ஆனால் தமிழ் மக்கள் அரசியலின் ஆழத்தைப் புரிந்து கொள்ளாதவர்களோ, அதன் போக்குகளை உணர்ந்து கொள்ளாதவர்களோ அல்லர். தேவைக்கேற்ப அவர்கள் சரியான முடிவுகளையே எடுத்து வந்திருக்கிறார்கள். தொடர்ந்தும் அவ்வாறே முடிவுகளை எடுப்பார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடயத்தில் தாம் தவறு செய்து விட்டோம் என்று அவர்கள் கருதுகின்ற ஒரு நிலையை கூட்டமைப்பு ஏற்படுத்திக் கொள்ளுமேயானால், அடுத்த தேர்தலில் அவர்கள் வேட்பாளர்களின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஆராயவே முனைவார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும், உரிமைகளையும் வெற்றி கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று என்ற கடப்பாட்டை மறந்து போனால், தமிழ் மக்களும் கூட்டமைப்பை மறந்து போகும் நிலைக்கு வந்து விடுவார்கள்.
தாம் தெரிவு செய்த பிரதிநிதிகள், தமது பிரச்சினைகளில் தம்முடன் இருக்க வேண்டும் என்று தான் மக்கள் விரும்புகிறார்கள். தமக்காக போராட வேண்டும், வாதாட வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் அண்மையில், வடக்கு, கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளால் அந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலையும் காணப்பட்டது. இதுபோன்ற இடைவெளிகள் திட்டமிட்டு உருவாக்கும் முனைப்புள் நடந்து கொண்டிருந்தாலும் அதற்கான சந்தர்ப்பத்தை விட்டுக் கொடுக்காது செயற்படுவது தான் சாதுரியமான அரசியல்.
மக்களுக்கான அரசியல் என்பது சாணக்கியத்தை மட்டும் மட்டுப்படுத்தியது அல்ல. அதற்கும் அப்பால் அர்ப்பணிப்பு முக்கியமானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்தகைய அர்ப்பணிப்பு அரசியலை எந்தளவுக்கு முன்னெடுக்கிறது என்பதை இப்போதைய கட்டத்திலாவது சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் தமிழ்த் தேசிய அரசியலில் கூட்டமைப்பின் இருப்பு என்பது மிக முக்கியமானது.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்