திரியாய் கிராமத்தையும் சிங்கள மயமாக்க முயற்சி; மருத்துவச் செயற்பாடுகளை முடக்கி மக்களை இடம்பெயரவைக்கும் சூழ்ச்சி அம்பலம்!
சிங்களமயமாக்கும் முயற்சியின் தொடராக தற்போது திரியாய் கிராமமும் அந்த நடவடிக்கைக்கு உட்படுத்த முயற்சிக்கப்படுவதாக திருகோணமலையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
புல்மோட்டை ஊடான திருகோணமலையின் பிரதான போக்குவரத்துப் பாதையில் திரியாய்க் கிராமம் அமைந்து காணப்படுகின்றது.
திரியாய்க்கிராமங்களுக்கு சமீபமாக காணப்படுகின்ற தமிழ்க்கிராமங்கள் பெயர்கள் உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகளால் சிங்களக்கிராமங்களாக மாற்றப்பட்டுவந்திருக்கின்றன. இதன் தொடராக தற்போது திரியாய் கிராமமும் இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றது.
திரியாய் கிராமத்தின் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக காணப்பட்டுவந்த வைத்தியசாலையை முற்றாக மூடுவதற்கான நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.
குறித்த வைத்தியசாலையினை நிரந்தரமாக மூடினால் அங்கு வாழ்கின்ற மக்கள் உடனடி மருத்துவ தேவைகளுக்காக பதினொரு கிலோமீற்றர் தூரம் பயணித்து குச்சவெளி வைத்தியசாலைக்கோ அல்லது பன்னிரண்டு கிலோமீற்றர் தூரம் பயணித்து புல்மோட்டை வைத்தியசாலைக்கோ செல்லவேண்டிய அவல நிலை ஏற்படும்.
அண்மைய காலமாக திரியாய் கிராமத்தில் யானை தாக்கி பன்னிரண்டு உயிர்கள் காவுகொள்ளப்பட்டிருக்கின்றன. அதேபோல பாம்புக்கடிக்கு அடிக்கடி ஆளாகும் சிரமங்களையும் அந்தக் கிராமத்து மக்கள் எதிர்கொண்டுவருகின்றனர்.
பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்பிற்கு அமைய தற்போது அந்த வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருகின்றது. குறித்த பணிப்பாளர் அங்கு பணியாற்றிய பெண் வைத்தியர் ஒருவரை மூதூர் வைத்தியசாலைக்கு மாற்றலாக்கியதுடன் வைத்தியசாலையின் செயற்பாடுகளை முடக்கியிருப்பதாக தெரியவருகிறது.
ஆனாலும் உள்ளகத் தகவல்களின் அடிப்படையில் அந்த வைத்தியசாலையை தற்காலிமாக மூடுவதாக மக்களுக்கு தெரிவித்து மக்கள் மத்தியிலிருந்து எதிர்பினைத் தவிர்த்து எதிர்காலத்தில் அதனை முற்றாக மூடுவதே இதன் உள்நோக்கம் என அறியமுடிந்திருக்கிறது.
இதனிடையே திரியாய் மற்றும் அதனை அண்மித்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து திருகோணமலை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் குடியேறியிருக்கின்றனர்.
தொழில் நிமித்தம் வாழ்கின்ற மக்கள் மட்டுமே திரியாயில் தற்போது வாழ்ந்துவருகின்றமையால் எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் எஞ்சியிருக்கின்ற மக்களையும் இடம்பெயர வைப்பதன் மூலம் திரியாய் கிராமத்தையும் முற்றுமுழுதான சிங்களக் கிராமமாக மாற்றிவிட முடியும் என்பதே சம்பந்தப்பட்டவர்களின் நோக்கமாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது.
கடந்தகாலங்களில் இடம்பெற்ற இனக்கலவரங்களின் போதும் இடப்பெயர்வுகளின் போதும் திரியாய்க் கிராமத்து மக்கள் பல்வேறு சிரமங்களையும் உயிரிழப்புக்களையும் சந்தித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.