ஆட்டம் காணுமா கூட்டு ஆட்சி?
ஐக்கிய தேசியக் கட்சி அமை த்த கூட்டு அரசாங்கத்தின் ஆயுள்காலம் இன்னமும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கப் போகிறது என்ற கேள்வி இப்போது அரசி யல் அரங்கில் எழுந்திருக்கிறது.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்
அதற்குக் காரணம், இந்த இரண்டு பிர தான கட்சிகளுக்கு இடையிலும் காணப்பட்டு வரும் இழுபறிகளும் மோதல்களும் தான்.
ஒரு பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 52 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு ஆட்சி யைக் கவிழ்க்கப் போவதாக அவ்வப்போது மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
கூட்டு அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் கூட தனித்து ஆட்சி அமைப்பது பற்றி அதிகம் பேசி வருகிறது.
ஐ.தே.க.வும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி யும் ஒன்றையொன்று வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்தக் கூட்டு அரசாங்கம் நீடித்து நிலைக்குமா இடையிலேயே கவிழ்ந்து போகுமா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.
இரண்டு கட்சிகளும் கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு 2015 ஆகஸ்ட் மாதம் உடன்பாடு ஒன்றை செய்திருந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு இணைந்து செயற்படும் வகையில் தான் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. அந்த உடன்பாடு வரும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.
இன்னும் நான்கு மாதங்கள் முடிந்த பின் னர், இரண்டு கட்சிகளும் இந்த உடன்பாட்டை நீடித்துக் கொள்ள வேண்டும் அல் லது உடன்பாடு முறிந்து போய்விட்டதாக பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
எதைச் செய்வதானாலும் அதனை மக்களுக்கு அவர்கள் நியாயப்படுத்த வேண் டியிருக்கும். அவ்வாறு குற்றச்சாட்டுகளை அடுக்கப் போனால், அது அவர்களின் தலை
யில் அவர்களே மண் அள்ளிப் போட்ட நிலையாக மாறி விடும். இது தான் இரு கட்சிகளுக்கும் இடையில் உள்ள பிரச்சினை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி யும், 2015ஆம் ஆண்டு இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டமைக்கு, காரணம், இரண்டு பேருக்கும் பொது எதிரியான மஹிந்த ராஜபக் ஷவை பலவீனப்படுத்துவது தான்.
மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அரசியலில் பலம் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமானால், சுதந்திரக் கட்சியினரையும் அதிகாரத்துக்கு இழுத்து வர வேண்டிய தேவை மைத்திரிபால சிறிசேனவுக்கும் இருந்தது. ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இருந்தது.
அரசாங்கத்தில் இணைந்து கொண்ட போது, ஐ.தே.க. தமக்கு வலுவான அமைச்சுக்களை வைத்துக் கொண்டு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு குறைந்த அதிகாரம் கொண்ட- முக்கியத்துவமற்ற அமைச்சுக்களையே வழங்கியது. இதனால், மஹிந்த அரசாங்கத்தில் சக்திவாய்ந்த அமைச்சர்களாக இருந்தவர்கள் கூட பிரதி அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஏற்
பட்ட முதல் முரண்பாடு இது தான். இங்கிருந்து தொடங்கிய விரிசல் இப்போது, ஒவ்வொரு விவகாரத்திலும் எதிரொலித் துக் கொண்டிருக்கிறது. ஐ.தே.க அமைச்சர்கள் கொண்டு வரும் திட்டங்களை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் எதிர்ப்பது, விமர்சிப்பது, வழக்கமான நிலையாக மாறியிருக்கிறது.
அதுபோலவே, சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் கொண்டு வரும் திட்டங்களை ஐ.தே.க அமைச்சர்கள் பலவீனப்படுத்தி, முட்டுக்கட்டை போடுகின்றனர். இதனால் அமைச்சரவைக் கூட்டங்கள் அண்மைக்காலமாகவே காரசாரமான வாக்குவாதங்கள் நடக்கின்ற இடமாக மாறியுள்ளன.
பல திட்டங்கள் அமைச்சரவைப் படிக்கட்டுகளைத் தாண்ட முடியாமல் சிக்கிப் போயுள்ளதற்கும் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் உள்ள இந்த அடிப்படை முரண்பாடுகள் தான் காரணம்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தை அதிகளவில் பயன்படுத்துவதாக ஒரு குற்றச்சாட்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் மத்தியில் உள்ளது. அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதாகவும் அவரது கட்சியினராலேயே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து, பாராளுமன்றத்துக்கு அதிகாரத்தை அளிப்பதான வாக்குறுதியை வழங்கித் தான் இப்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தது. நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக ஒழிப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லாவிடினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகா
ரத்தை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன்படுத்தி வருகிறார். ஒரு வகையில் பாராளுமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கும் செயற்பாடாகவும் இதனைக் கருதலாம். அவ்வாறான நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரங்களை மிகையாகப் பயன்படுத்துவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டுகள் அபத்தமானவையாக உள்ளன.
பாராளுமன்றத்துக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு உடையவர் பிரதமர். பாராளுமன்றத்துக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களை அவரே பயன்படுத்த முடியும். அவ்வாறாயின், பிரதமர் அதிக அதிகாரங்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகளை கூறுவது தேர்தல் கால வாக்குறுதிகளை மீறுகின்ற செயலாகும்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்திருந்தாலும் அதற்குள் பல முகங்கள் உள்ளன. மஹிந்த ராஜபக் ஷவை வெளிப்படையாக ஆதரிப்பவர்கள், அவரை வெளிப்படையாக எதிர்ப்பவர்கள், வெளிப்படையாக எதிர்ப்பையோ ஆதரவையோ வெளிப்படுத்தாமல் மதில் மேல் பூனையாக இருப்பவர்கள் என்று மூன்று முகங்களைக் கொண்டவர்கள் சுதந்திரக் கட்சியில் இருக்கின்றனர்..
கூட்டு அரசாங்கத்தில் இருந்து கொண்டே, மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் மஹிந்த ராஜபக் ஷவின் நிகழ்ச்சி நிரலுக்குள் செயற்படுகிறார்கள் என்ற சந்தேகங்களும் இருக்கின்றன.
அரசாங்கத்தில் இருக்கின்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்று மஹிந்த ராஜபக் ஷ அடிக்கடி கூறிக் கொள்வதும் கூட அந்தச் சந்தேகத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஐ.தே.கவுடன் இணைந்திருப்பதால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டியுள்ளது, தனித்து ஆட்சியமைக்க வேண்டும் என்ற கருத்து அந்தக் கட்சியின் பல உயர்மட்டத் தலைவர்களிடம் இருக்கிறது.
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி வீழ்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் தான் ஆகின்றன அதற்குள் தனித்து ஆட்சியமைக்கும் ஆசை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வந்து விட்டது.
1977ஆம் ஆண்டு சிறிமாவோ தலைமைலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஜே.ஆரிடம் இழந்த ஆட்சியை, 1994ஆம் ஆண்டு சந்திரிகாவின் தலைமையில் தான் மீளப்பெற முடிந்தது. அப்போது கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் பொறுமையோடு இருக்க நேரிட்டது.
ஆனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருக்கு இப்போது, அந்தப் பொறுமையில்லை. அரசாங்கத்தில் பங்காளியாக இருந்தாலும் தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று அங்குமிங்குமாக அங்கலாய்க்கத் தொடங்கியுள்ளனர்.
இவர்களின் ஆட்டத்துக்கு ஆட வேண்டிய பொம்மையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மாறியிருக்கிறார். அவரும் கூட விரைவில் தனித்து ஆட்சியமைப்போம் என்று அண்மையில் கூறியிருக்கிறார். ஆனால் அது ஒன்றும் சுலபமான காரியமில்லை என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.
மஹிந்த ராஜபக் ஷ இல்லாத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு, செல்வாக்கு இல்லை. இந்தப் பலவீனத்தை வைத்துக் கொண்டு தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மடக்கி வைத்திருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கினாலும், அதில் மஹிந்த ராஜபக் ஷ விசுவாசிகள் அதிகளவில் இருக்கிறார்கள். இந்த இரண்டு தரப்பினரையும் ஒன்று சேரவிடாமல் ஐ.தே.கவே தடுத்து வருதாக பரவலான கருத்து அந்தக் கட்சியினரிடம் உள்ளது.
இரண்டு தரப்புகளையும் பிரித்தாளுவதன் மூலம், ஐதேக பலமுடன் இருக்க முடியும். அதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பலமடைவதையும் தடுக்க முடியும். ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்தி வருகிறார் என்ற கருத்து, கட்சிக்குள் வலுப்பெற்று வரும் நிலையில் தான் கூட்டு அரசாங்கத்தை விட்டு விலகி தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற கருத்தும் வலுவடைந்து வருகிறது.
வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான உடன்பாடு முடிவுக்கு வருவதுடன், அரசாங்கத்தை விட்டு விலகி விட வேண்டும் என்று இப்போதே ஒரு சாரார் கூறத் தொடங்கி விட்டனர்.
தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணவில்லை. தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்புக் கொள்கை, மத்திய வங்கி பிணை முறி மோசடியால் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
இப்படியே கூட்டு அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் இருந்த கவர்ச்சி குறையத் தொடங்கியுள்ள நிலையில், இதிலிருந்து நழுவிக் கொள்வதே பாதுகாப்பானது என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள சிலர் நினைக்கிறார்கள்.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அவ்வாறு ஒரு முடிவை எடுப்பார் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. ஏனென்றால் அவர் இன்று அதிகாரத்தில் இருப்பதற்கு, ஐ.தே.க பிரதான காரணம். அந்த நன்றிக் கடனை அவர் மறக்கமாட்டார்.
அடுத்து, தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால், ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் பதவியில் இருக்க வேண்டும். ஒருவேளை இந்த அரசாங்கம் கவிழ்க்கப்படும் நிலை ஏற்பட்டு மீண்டும் மஹிந்த ராஜபக் ஷ அதிகாரத்துக்கு வரும் நிலை ஏற்பட்டால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்தாலும், அடங்கிப் போக வேண்டிய நிலை தான் ஏற்படும் என்பதும் ஜனாதிபதிக்குத் தெரியும்.
எனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எப்படியும், கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பப் போவதில்லை. இத்தகைய கட்டத்தில், தற்போதைய கூட்டு அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் வேண்டுமானால் வெளியேறும் நிலை ஏற்படலாம்.
அவர்கள் மஹிந்த அணியுடன் இணைவார்கள் என்று கூற முடியாது. தம்மைப் பரிசுத்தமானவர்களாக காட்டிக் கொள்ள முனையும் அவர்கள் மீண்டும் சேற்றுக்குள் விழ விரும்பமாட்டார்கள்.
தற்போதைய அரசாங்கம் வரும் நாட்களில் ஆட்டம் காணும் நிலையைச் சந்தித்தாலும், அடியோடு பெயர்ந்து விழுவதற்கான வாய்ப்புகள் அரிது தான். ஏனென்றால், இரண்டு பிரதான கட்சிகளுக்குமே இந்த வாய்ப்பை நழுவ விட்டால், வேறு கதி இல்லை.