Breaking News

கேப்பாபிலவு காணிகளை விடுவிக்க 5 மில்லியன் ரூபாய் கோரும் இராணுவம்



முல்லைத்தீவு – கேப்பாபிலவில் மக்களின் காணிகளை விடுவிக்க இராணுவத்தினருக்கு 5 மில்லியன் ரூபாய் அரசாங்கத்தினால் வழங்கப்பட உள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற பனம்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையத் திறப்பு விழாவிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கேப்பாபிலவு கிராம மக்களின் 399 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்பட இருக்கின்றன. இப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை வேறு பிரதேசங்களுக்கு மாற்றுவதற்கு இராணுவத்தினர் 5 மில்லியன் ருபாவினைக் கேட்டிருக்கின்றார்கள்.

இக்குறிப்பிட்ட தொகையினை அரசாங்கம் வழங்கி, மக்களுக்கான காணிகளை விடுவிக்கும். அத்துடன் இம்மாதம் 24ஆம் திகதி கொழும்பில் பாதுகாப்பு அமைச்சினது அதிகாரிகள் மற்றும் வட.மாகாண படையதிகாரிகள் உள்ளிட்டோருக்கான சந்திப்பொன்று இடம்பெறவிருக்கின்றது.

இக்கூட்டத்தில் காணிகள் எப்போது விடுவிக்கப்பட முடியும் என்பது குறித்த தீர்மானங்களுடன், யாழ்.வலிகாமம் மேற்கு பகுதிகள் மற்றும் மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுவிப்பது தொடர்பாகவும் முடிவுகள் எடுக்கப்படும்” என அமைச்சர் சுவாமிநாதன் மேலும் தெரிவித்தார்.