ஜெனிவா வாக்குறுதிகளை சிறிலங்கா அவசரமாக நிறைவேற்ற வேண்டும் – ஜேர்மனி
ஜெனிவாவில் 2015இல் சிறிலங்கா அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் இது என்று ஜேர்மனி தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கான ஜேர்மனி தூதுவர் ஜோன் ரோட் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தான் அறிவித்த மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலை முன்நோக்கி நகர்த்துவதற்கு அரசியல் விருப்புடன், சிறிலங்கா அரசாங்கம் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.
காணாமல் போனோருக்கான பணியகம், தகவல் உரிமைச் சட்டம், அரசியலமைப்பு பேரவை என்பன வெற்றிகரமான நகர்வுகளாக இருக்கின்றன.
அதேவேளை, அதிகாரங்களைப் பகிரும் வகையில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காணிகளை மீளளித்தல், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை மாற்றியமைத்தல்,ஊழலுக்கு எதிரான காத்திரமான நடவடிக்கை, தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை என்பன இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக இருக்கின்றன.” என்றும் அவர் குறிப்பிட்டார்.