Breaking News

பொறுப்புக்கூறலை செய்யாவிடின் பயங்கரமான விளைவுகள் ஏற்படும் – சிவில் சமூகம் எச்சரிக்கை

சிறிலங்கா அரசாங்கம் அனுசரணை வழங்கிய ஜெனிவா தீர்மானத்துக்கு அமைவாக, மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.


கொழும்பில் நேற்றுமுன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தைச் சேர்ந்த அகலங்க ஹெற்றியாராச்சி கருத்து வெளியிடுகையில்,

“போரின் போதும், போருக்குப் பின்னரும், குற்றங்களை இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

போரின் போது கொடுமைகளை செய்த சீருடையில் உள்ளவர்களை காப்பாற்றுவதற்கு விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும் முயற்சிக்கின்றனர்.

பொறுப்புக்கூறல் விவகாரங்கள் சரியாகத் தீர்க்கப்படாவிட்டால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டவர்கள் என்பதற்காக குற்றமிழைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்கக் கூடாது.

போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.