Breaking News

“சிறந்த ஆட்சியாளர் மஹிந்த” – தந்தை செல்வா நினைவு நிகழ்வில் சம்பந்தன் பெருமிதம்!?



ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீது எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் புகழாரம் சூட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது தமிழ் மக்களின் தேசியப் இனப்பிரச்சனைக்கு அதி உச்ச அளவில் அதிகாரங்களை பகிர முயற்சித்திருந்ததாகக் கூறியே சம்பந்தன் அவரை புகழ்ந்துள்ளார்.

தந்தை செல்வாவின் 40ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற தந்தை செல்வா நினைவுப்பேருரையில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் புதிய அரசியல் யாப்பைத் தயாரிக்கும் பணிகளில் பிரிக்கப்படாத ஐக்கிய ஸ்ரீலங்கா தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இரா.சம்பந்தன் “அரசியல் யாப்பு ஒன்றினை உருவாக்குவது எந்தவொரு நாட்டிலும் இலகுவான ஒரு காரியமல்ல. அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அது உருவாக்கப்பட வேண்டும். யாப்பு தொடர்பிலான திட்ட வரைபு பணிகளில் பிரிக்கப்படாத ஐக்கிய ஸ்ரீலங்கா தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலம் மிகவும் கடினமானது. 30 வருடங்களாக இந்த நாட்டில் யுத்தமொன்று நடைபெற்றது. மக்கள் மிகவும் துன்பப்பட்டார்கள். கடந்த இரு தசாப்தங்களாக புதிய யாப்பு ஒன்றினை உருவாக்குவது தொடர்பிலான சில கணிசமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட அந்த சந்தர்ப்பத்திலிருந்து இந்த நாட்டின் ஒவ்வொரு தலைவர்களும், ரணசிங்க பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்சவும் கூட யாப்பினை மேம்படுத்த சில முயற்றசிகளை மேற்கொண்டனர். அதனூடாக தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண எத்தனித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியல் யாப்பு முன்மொழிவுகள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்றை அமைத்தார். மிகவும் அதியுச்ச சாத்தியமான அதிகாரப் பகிர்வு தொடர்பிலான முன்மொழிவுகளுடன் வருமாறு அவர் அந்த குழுவிற்கு அறிவுறுத்தியிருந்தார். மக்கள் அவர்களது தலைவிதியை தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை மக்கள் வாழும் அந்த பிரதேசங்களிலேயே அவர்களுக்கு வழங்க வேண்டுமென அவர் தெரிவித்திருந்தார்.“

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்த இந்த நினைவுப்பேருரையில் தொடர்ந்து உரையாற்றிய சம்பந்தன், புதிய அரசியல் யாப்பைத் தயாரிக்கும் பணிகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இரா.சம்பந்தன் “புதிய யாப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான பணிகளில் நாம் ஒன்றிணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். இதன் மூலம் தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல முழு நாட்டிற்கும் நன்மை கிடைக்கப்போகின்றது. இந்த நாட்டில் வாழும் சிங்கள மக்களுக்கும் அபிவிருத்திகள் சரியாக சென்றடையவில்லை என அமைச்சர் ராஜித குறிப்பிட்டார். அதிகாரப் பகிர்வின் ஊடாக அது வெகு விரைவில் சாத்தியமாகும்.

இன்று அனைத்து மாகாண முதலமைச்சர்களும் அதிகாரப் பகிர்வு அவசியமென கூறுகின்றார்கள். புதிய யாப்பிற்கு இந்த நாட்டு மக்கள் எதிர்ப்பினை வெளியிடவில்லை. அதனை இருட்டிலிருந்து செய்ய முடியாது. நாம் இந்த யாப்பின் ஊடாக எவற்றை வழங்கப்போகின்றோம் என்பதை இந்த மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். நாம் எமது பாதையை இழந்துவிட்டோம். நாங்கள் தேவையற்ற பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம்.

அரசியல் கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தன. எனினும் அதிலிருந்து நாம் பாடம் கற்றுள்ளோம். இப்பொழுது நாம் அனைவரும் ஒன்றைிணைந்து அனைத்து மக்களுக்குமான யாப்பு ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம்.“