மீதோட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தம் :10 பேர் பலி
மீதோட்டமுல்லை பகுதியிலுள்ள குப்பை மேடு மக்கள் குடியிருக்கும் வீடுகள் மீது சரிந்துவீழ்ந்ததில் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் காயமடைந்த 12 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஏழு பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தஹம்புர பகுதியிலுள்ள 40 க்கும் அதிகமான வீடுகள் அழிவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் அதற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் முப்படை மற்றும் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த சுமார் 400 பேர் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகவல்களை வழங்கும் பொருட்டு, தகவல் நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு சென்ற அமைச்சர் ஏ.ஏச்.எம் பௌசி உள்ளிட்ட குழுவினருக்கு பிரதேசவாசிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
மீட்பு பணிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் அனர்த்தம் இடம்பெற்ற பகுதிக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.