Breaking News

வடக்கில் சமூக உட்கட்டமைப்புக்கு அதிக நிதி!



2017ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியில், வடக்கில் சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் அதிகளவிலான தொகையை ஒதுக்கியுள்ளார்.

மாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இவ்வருடத்திற்கான நிதியொதுக்கீட்டில் 2.6 மில்லியன் ரூபாயை சமூக உட்கட்டுமான அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அதில் குறிப்பாக பாடசாலைகளுக்கு சுத்தமான வடிகட்டிய குடிநீர் வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 1.6 மில்லியன் ரூபாவும், நலிவடைந்த குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளுக்காக ரூபாய் 9 இலட்சமும், விவசாய அபிவிருத்திக்காக 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவும், மத வழிபாட்டுத்தலங்களின் அபிவிருத்திக்காகவும், விளையாட்டுக்கழகங்களின் அபிவிருத்திக்காகவும் ரூபாய் 7 இலட்சம் அடங்கலாக மொத்தம் 6 மில்லியன் ரூபா இம்முறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.