Breaking News

வடகொரியாவுக்கு புதிய தடைகள் விதிக்கப்படும்: ஐ.நா. எச்சரிக்கை

வடகொரியா எத்தகைய ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் சோதனை செய்யக்கூடாது என ஐ.நா.சபை தடைவிதித்துள்ளது. ஐ.நா.வின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 5 ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியது. இதில் கடைசியாக ஏவப்பட்ட ஏவுகணை சோதனை தோல்வியடைந்தது. 

வடகொரியாவின் இத்தகைய செயலை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சாடியிருந்தார். மேலும் வடகொரியா - அமெரிக்கா இடையே போர் மூளும் சூழலும் ஏற்பட்டது. 

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் இன்றைய கூட்டத்தில், வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற நாடுகளின் ஸ்திரத்தன்மையை குலைக்கின்ற வகையில் வடகொரியாவின் நடத்தை இனியும் அமைந்தால் அந்நாட்டின் மீது மேலும் புதிய தடைகள் திணிக்கப்படும் என்றும் அச்சுறுத்தியுள்ளது. 
இதுகுறித்து ஐ.நா. சார்பில் வெளியிடப்பட்ட ஒருமித்த அறிக்கையில், வடகொரியா அணுஆயுத சோதனையை நடத்தக்கூடாது. அதுமட்டுமல்லாமல் கொரிய தீபகற்பத்தையோ, அண்டை நாடுகளையோ அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனைகளை நடத்தக் கூடாது என்றும் கோரியுள்ளது.