யாழில் இன்று முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை
புவி தினமான இன்று (சனிக்கிழமை) முதல் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனையை முற்றாக தடை செய்ய வேண்டும் என யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது.
வட. மாகாண சபையின் தீர்மானத்திற்கு அமையவும், யாழ். மாநகர சபையின் சூழல்நேய நடவடிக்கைகளுக்கு வலுச் சேர்க்கும் வகையிலும் இந்நடவடிக்கையில் சகலரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் யாழ். மாநகர சபையினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் காலங்களில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகள் தங்கள் இடங்களில் சேரும் திண்மக் கழிவுகளில் காணப்படுமாயின் யாழ். மாநகர பொதுச் சுகாதார பொறியியற் பிரிவினரால் குறித்த இடத்திற்கான கழிவகற்றல் சேவை நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாளாந்த பாவனையின் பின்னர் கழிவாக வீசப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் ஆகியவையே பெருமளவில் திரண்டு மாநகர கழிவகற்றலில் சவால்களையும் சூழலுக்குப் பெரும் தீங்கையும் ஏற்படுத்துவனவாயுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.