Breaking News

இலட்சக்கணக்கான மக்கள் குடிநீர் இன்றி அவதி



ஶ்ரீலங்காவின் 16 மாவட்டங்களில் உள்ள மக்கள் குடிப்பதற்கு நீர் இன்றிய நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு போதிய மழைவீச்சி கிடைக்காமை மற்றும் இவ்வாண்டும் நீடிக்கும் வரட்சி காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான நெருக்கடி ஏற்படும் என அனர்த்த முகாமைத்துவப் பிரிவு எதிர்பார்த்த போதிலும் சில இடங்களில் பெய்த மழைகாரணமாக பாரிய நெருக்கடி நிலைமை தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் நாட்டிலுள்ள 16 மாவட்டங்களில் வசிக்கும் அநேகமான மக்கள் குடிநீரைப் பெறுவதில் நெருக்கடியான நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

களுத்துறை மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட சுமார் ஒரு இலட்சத்து 98ஆயிரம் பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டுவருவதாக அவர் கூறியுள்ளார்.

கம்பஹா மாவட்டத்திலுள்ள 8 பிரதேச செயலாளர் பிரிவுகளில் சுமார் ஒரு இலட்சத்து 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அனுர பிரியதர்ஷ யாப்பா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.