வவுனியாவில் வதை முகாம் – ஜெனரல்கள் 6 பேர் மீது குற்றச்சாட்டு
மிகக் கொரூரமான சித்திரவதைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் படைமுகாமை இயக்கிய சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து ஜெனரல்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்துமாறு, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
தென்னாபிரிக்க மனித உரிமை செயற்பாட்டாளரும், முன்னாள் ஐ.நா நிபுணருமான யஸ்மின் சூகா தலைமையிலான அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இதுதொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வவுனியாவில் உள்ள ஜோசப் முகாமில் வதைக்கூடம் ஒன்று இயக்கப்பட்டு வந்ததாகவும், அங்கு சித்திரவதைகள், வன்புணர்வு உள்ளிட்ட பாலியல் வன்முறைகள் இடம்பெற்றதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
ஜோசப் முகாம் வதைக் கூடத்தை இயக்கியவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களில் சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும், தற்போது பிரேசிலுக்கான தூதுவருமான ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவும் அடங்கியுள்ளார். இவர் 2007 ஓகஸ்ட் தொடக்கம், 2009 ஜூலை வரை வன்னிப் படைகளின் தலைமையக தளபதியாக பதவியில் இருந்தவர்.
ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்குத் தெரியாமல் இந்த இரகசிய வதைக்கூடம் இருந்திருக்கச் சாத்தியமில்லை என்று யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.
அந்த வதைக்கூடத்தின் அமைவு தொடர்பான வரைபடத்துடன் இந்த அறிக்கை வெளியி்டப்பட்டுள்ளது. இங்கிருந்து தப்பிய 46 பேர் அளித்த சாட்சியங்களின் மூலம் அந்த வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.
வன்னிப்படைகளின் தலைமையக தளபதிகளாகப் பணியாற்றிய, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, மற்றும் தற்போதைய தளபதி மேஜர் ஜெனரல் ஜீவன் ருவான் குலதுங்க ஆகியோரும் இந்த வதைமுகாம் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.