Breaking News

அனைத்துலக நீதிபதிகளை அழைக்க அரசியலமைப்பில் இடமில்லை – கைவிரித்தது சிறிலங்கா



மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு சிறிலங்காவின் அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“அனைத்துலக நீதிபதிகள் என்பது சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ள ஒரு பரிந்துரை மட்டுமே.

அதனை கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எமக்கில்லை. இறைமையுள்ள நாடு என்ற வகையில் சரியான பொறிமுறையை தீர்மானிக்கும் உரிமை எமக்கு உள்ளது.

விசாரணைப் பொறிமுறைக்கு அனைத்துலக நீதிபதிகளை கொண்டு வருவதற்கு தற்போதைய அரசியலமைப்பில் இடமில்லை. அரசியலமைப்பை மீறி வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வந்து விசாரணை நடத்த நாம் தயாராக இல்லை.

எனவே நாங்கள் உள்ளக நீதிபதிகளைக் கொண்டே விசாரணைப் பொறிமுறையைக் கொண்டு வருவோம்.

நாட்டின் நீதித்துறை கடந்த காலங்களில் சுயாதீனத்தன்மையை இழந்து காணப்பட்டமையே, அனைத்துலக நீதிபதிகள் பற்றிய கோரிக்கைக்கான காரணம். நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் சுயாதீன நீதித்துறையை கட்டியெழுப்பியிருக்கிறோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பகமான தீர்வை வழங்குவதே எமது எதிர்பார்ப்பு. அதனை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிவதற்கான தேவை எங்களுக்கும் இருக்கிறது. உண்மையை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அதற்காகவே காணாமல்போனோர் பணியகத்தை அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நல்லிணக்கத்திலும் பொறுப்புக்கூறலிலும் முன்னேற்றத்தை வெளிக்காட்டுவதற்கு நாங்கள் ஜெனிவாவில் இரண்டு ஆண்டுகால அவகாசத்தைக் கோரினோம். அந்த கால அவகாசம் எமக்கு கிடைத்துள்ளது.

நாம் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கு அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன. ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.