Breaking News

ஐ.நா பணியகத்துக்கு இலங்கையில் இடமில்லை – அனைத்துலக சமூகம் தமது பக்கம் நிற்கிறதாம்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் செயலகம் ஒன்றை சிறிலங்காவில் அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் இணங்கவில்லை என்று பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐ.நா தீர்மானத்தின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கவும், தேவையான உதவிகளை வழங்கவும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் செயலகம் ஒன்றை சிறிலங்காவில் அமைப்பதற்கு, சிறிலங்கா அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்காணிக்கும் செயலகம் ஒன்றை வடக்கு. கிழக்கில் அமைக்க வேண்டும் என்று கோரியிருந்தது.

எனினும், இத்தகைய  கோரிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் இணங்கவில்லை என்று பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்தார்.

‘இதுபற்றி பரிந்துரைக்கப்பட்ட போதும் சிறிலங்கா அரசாங்கம் அதற்கு உடன்படவில்லை.

அனைத்துலக சமூகம் எம்முடன் இருக்கிறது. அவர்கள் எமது நிலைமையை புரிந்து கொண்டுள்ளனர்.

இந்த விடயத்தில் எமது அமைச்சுக்கள், காவல்துறை, நீதிமன்றங்கள், மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பன சுதந்திரமாக செயற்பட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்காவது தவறுகள் இருந்தால், அனைத்துலக அமைப்புகளிடம் இருந்து தொழில்நுட்ப உதவிகளைக் கோருவோம்.

ஆனால், ஐ.நாவின் பணியகம் எமக்குத் தேவையில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல விடயங்களில் முற்போக்காக செயற்படுகிறது. அவர்களுக்கு என்றும் ஒரு அரசியல் இருக்கிறது. அந்தவகையில் தான் இந்த விடயத்தில் அவர்களின் செயற்பாடு இருக்கிறது.” என்றும் அவர் குறிப்பிட்டார்