சிறிலங்கா குறித்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குமாறு நாடுகளை அழைக்கிறது அமெரிக்கா
சிறிலங்காவில் நல்லிணக்கத்தையும், அமைதியையும் ஏற்படுத்துவதற்காக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குமாறு, நாடுகளுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பதில் பேச்சாளர் மார்க் ரோனர் கருத்து வெளியிடுகையில்,
“சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் மேற்கொண்டுள்ள தொடர்ச்சியான முயற்சிகளை அமெரிக்க அரசாங்கம் பாராட்டுகிறது.
சிறிலங்காவில் அனைத்து மக்களுக்கும் நீதி மற்றும் அமைதியை ஏற்படுத்தும், எங்களது நீடித்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், சிறிலங்காவில் நல்லிணக்கம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் தீர்மான வரைவு கடந்த திங்கட்கிழமை, ஏனைய நட்பு நாடுகளுடன் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ளது.
இந்த தீர்மான வரைவுக்காக, பிரித்தானியா, மொன்ரனிக்ரோ, மசிடோனியா மற்றும் சிறிலங்காவுடன் அமெரிக்கா நெருக்கமாக இணைந்து பணியாற்றியுள்ளது.
மோதல்கள் மீண்டும் நிகழாமை, ஜனநாயக ஆட்சியைப் பலப்படுத்தல்,மற்றும் எல்லா இலங்கையர்களுக்குமான சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில், சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் நீதியை ஏற்படுத்தவதற்கு உதவும், இந்த வரைவை நிறைவேற்ற எதிர்பார்க்கிறோம்.
தீர்மானத்துக்கு மீண்டும் ஒருமுறை இணை அனுசரணை வழங்க சிறிலங்கா இணங்கியிருப்பது மகிழ்ச்சி. சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் கொண்ட ஐ.நா உறுப்பு நாடுகள் அதனை நிரூபிக்கும் வகையில், தமது பெயர்களை இணை அனுசரணையாளர்களின் பட்டியலில் இணைத்துக் கொள்ள அழைக்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.