Breaking News

வடக்கு மாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஐ.நாவில் நேரடியாக கையளிக்க தீர்மானம்



வடக்கு மாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேரடியாக கையளிக்கப்படும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் குறித்தும் யாழ். ஊடக மையத்தில்  நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் ஒப்புதல் வழங்கி நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரியும் இலங்கை அரசாங்கத்திற்கு காலஅவகாசம் வழங்க கூடாது எனக் கோரியும் செவ்வாய்க்கிழமை பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டது.

குறித்த பிரேரணையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (நாளைமறுதினம்) சபைக்கு கொண்டு வந்து சபையினூடாக நேரடியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

இந்த பிரேரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரிடம் எதிர்வரும் 20ஆம் திகதி வழங்கி வைப்பதுடன் அதன் பிரதிகளை உறுப்பு நாடுகளிடம் கையளிக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.