மிலேனியம் சவால் திட்டப் பணியகத்தை இலங்கையில் அமைக்கிறது அமெரிக்கா
அமெரிக்காவின் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு திட்டப் பணியகத்தை சிறிலங்காவில் அமைப்பதற்கு, அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
மிலேனியம் சவால் ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 700 டொலரை முதலீடு செய்வதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது.
அபிவிருத்திக்கு இடையூறான பகுதிகள் என்று மிலேனியம் சவால் ஒத்துழைப்பு திட்டத்தினால் அடையாளம் காணப்படும் பகுதிகளில், கொள்கை உறுதிப்பாடு, தரைவழிப் போக்குவரத்து துறைகளில் இந்த நிதியைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான நிதிகளைப் பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு சிறிலங்கா நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும்.
ஊழல் எதிர்ப்பு, மற்றும் ஜனநாயக தரநியமங்கள் என்பனவற்றில் அரசாங்கம் தோல்வியடையுமானால், மிலேனியம் சவால் நிதியத்தின் உதவிகளை இழக்க நேரிடும்.
இந்த மிலேனியம் சவால் ஒத்துழைப்புத் திட்டத்துக்கான பணியகத்தை உருவாக்கி அதற்கான அதிகாரிகளை நியமிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் 58 மில்லியன் ரூபாவை 2017ஆம் ஆண்டு செலவிட வேண்டும்.
அதுபோன்று 2018ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்திலும் அதேளவு தொகை ஒதுக்க வேண்டும். என்றும் அமைச்சரவைப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
உலகளாவிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் ஒரு அங்கமாகவே மிலேனியம் சவால் ஒத்துழைப்புத் திட்டத்தை அமெரிக்கா செயற்படுத்தி வருகிறது.
சிறிலங்காவுக்கு 2005ஆம் ஆண்டில் இருந்து இந்த திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்பட்ட போதிலும், இதற்குத் தேவையான தரநியமங்களைப் பூர்த்தி செய்யாததால் அது நிறுத்தப்பட்டது.
அண்மையில் இந்த திட்டத்தை மீண்டும் வழங்க அமெரிக்கா முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.