சாந்தபுரம் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை
கிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியில் ராணுவ வீரர் என சந்தேகிக்கப்படும் நபரொருவரால் பெண்ணொருவர் கத்திக் குத்துக்கு இலக்கான சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் இன்றும் (சனிக்கிழமை) தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்றுள்ள பொலிஸார், அங்கு சோதனைகளை முன்னெடுத்து வருவதுடன், கத்திக்குத்;துக்கு இலக்கான பெண்ணின் உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகளிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சாந்தபுரம், 8ஆம் வீதி பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 56 வயதுடைய பெண்ணொருவர் ராணுவ வீரர் என சந்தேகிக்கப்படும் நபரொருவரினால் வலுக்கட்டாயமாக பற்றைக் காட்டுப் பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், குறித்த பெண்ணின் கழுத்துப் பகுதியில் கத்தியால் குத்திவிட்டு மேற்படி நபர் தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.