Breaking News

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை தமிழ் அமைப்புக்கள் தத்தெடுக்க வேண்டும்: வியாழேந்திரன்



யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமை நிலையில் உள்ள தமிழ் எல்லைப் புறக் கிராமங்களை புலம்பெயர் வாழ் தமிழ் அமைப்புக்கள் தத்தெடுத்து அபிவிருத்தி செய்யும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘கிராம வீதியில்’ ஒருநாள் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு – வவூணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பன்சேனை கிராம மக்களை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘கிராம வீதியில்’ ஒருநாள் செயற்திட்டத்தின் மூலம் பல கிராமங்களுக்கு நான் நேரடியாகச் சென்று அந்த கிராமத்தில் உள்ள மக்களுடன் கலந்துரையாடி என்னால் முடிந்த அளவிற்கு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றேன்.

நாடாளுமன்ற தேர்தலின் போது இந்தப் பகுதிகளுக்கு பிரசாரத்திற்கு கூட வருகை தராத போதிலும் நேரடியாக விஜயம் செய்து உங்களுடன் கலந்துரையாடி இக்கிராமத்தில் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு என்னால் இயலுமான முயற்சிகளை எடுப்பேன்.

கிராமத்தின் தேவைப்பாடுகளை அரசாங்கத்தின் மூலமாகவோ, எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாகவோ, புலம்பெயர் வாழ் தமிழ் அமைப்புக்களின் நிதியுதவியினாலோ பூர்த்தி செய்து தருவேன்.

கனடா சென்றிருந்த போது அங்குள்ள புலம்பெயர் அமைப்புக்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய, தற்போது புலையவெளி, பாவற்கொடிச்சேனை கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பன்சேனை கிராமத்தினையும் அபிவிருத்தி செய்யும்படி புலம்பெயர் வாழ் தமிழ் அமைப்புக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அவர்களது உதவியைக் கொண்டு வெகு விரைவில் பன்சேனை கிராமத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பமாகும்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.