சர்வதேச விசாரணை பொறிமுறையிலிருந்து விடுபட இலங்கை கடும் பிரயத்தனம்
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் கூடிய கலப்பு நீதிமன்ற முறை ஏற்படுத்தப்பட வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரி வருகின்ற நிலையில், இதிலிருந்து விடுபட இலங்கை அரசாங்கம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பல சர்வதேச நாடுகளின் உதவியை இலங்கை நாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையில் குறிப்பிடப்பட்ட நிலைமாறுகால நீதிச் செயற்பாட்டின் அடிப்படையிலான விடயங்களை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்காமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச பங்களிப்புடன் கூடிய விசாரணை பொறிமுறை இலங்கையில் ஏற்படுத்தப்பட மாட்டாதென ஜனாதிபதியும் பிரதமரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதாயின் சர்வதேச பங்களிப்புடன் கூடிய கலப்பு நீதிமன்ற பொறிமுறையை ஏற்படுத்த வேண்டுமென்ற பரிந்துரையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இம்முறையும் முன்வைத்துள்ளது. இந்நிலையில், குறித்த பரிந்துரையை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.