Breaking News

எல்லா பரிந்துரைகளுமே முக்கியமானவை தான் – ஐ.நா ஆணையாளர் விடாப்பிடி(காணொளி)



சிறிலங்கா தொடர்பாக தமது அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள எல்லா பரிந்துரைகளுமே முக்கியமானவை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சிறிலங்கா தொடர்பான அறிக்கையை நேற்று அதிகாரபூர்வமாக முன்வைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து உறுப்பு நாடுகள், தமது கருத்துக்களை வெளியிட்டன. முடிவில், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பதிலுரை இடம்பெற்றது.

இதன் போது கருத்து வெளியிட்ட அவர், ‘சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது முன்னுரிமை அளிக்கத் தேவையற்றது என்று இல்லை. எல்லாப் பரிந்துரைகளுமே முக்கியமானவை.

சிறிலங்கா அரசு ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன.

அனைத்துலக நீதிபதிகள் அடங்கிய, கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, போர்க்குற்ற விசாரணை தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

பாதிக்கப்பட்ட மக்களிடம் அதிகரித்து வரும் அமைதியின்மை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களை களையும் வகையில், சிறிலங்கா அரசாங்கத்துடன் ஆக்கபூர்வமான வகையில் இணைந்து செயற்பட முடியும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நம்புகிறது.

கடந்தகாலத்தை விட வேறுபட்டதொரு எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு சிறிலங்கா அடிப்படை ஒழுங்கில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் நீதி நிலைநாட்டப்பட்டது என்று நம்பும் வரையில், நிலையான அமைதியை ஏற்படுத்துவது கடினம்.

சிறிலங்கா அரசாங்கத்தின் கடப்பாடுகளை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் மீண்டும் நினைவுபடுத்துவதுடன், உதவிகளையும் வழங்கும், கண்காணிப்பையும் மேற்கொள்ளும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.