கோத்தா தலைமையில் மரணப்படை – அனைத்துலக ஊடகங்களில் பரபரப்பு
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தாபய ராஜபக்ச, ஊடகவியலாளர்களை இலகுக்கு வைக்கும் உயர்மட்ட இரகசிய மரணப்படை ஒன்றை இயக்கினார் என்று அனைத்துலக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
கல்கிசை நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று வெளியிட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டே இந்தச் செய்திகள் அனைத்துலக ஊடகங்களில் பரபரப்பாக வெளியிடப்பட்டுள்ளன.
சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையை, சிறிலங்காவின். பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்சவின் கீழ் இயங்கிய இரகசியக் குழுவே மேற்கொண்டதாக நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கோத்தாபய ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் இருந்த மரணப்படையே இந்தக் கொலையைச் செய்திருப்பதற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண ஊடாக, கோத்தாபய ராஜபக்ச சிறப்பு இரகசிய பிரிவு ஒன்றை இயக்கினார் என்றும், அது தனது அதிகாரத்துக்கு அப்பால் செயற்பட்டது என்றும் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சாட்சியம் அளித்துள்ளார் என்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஊடகவியலாளர்களை இலக்கு வைத்துச் செயற்பட்ட இந்தப் பிரிவு, இராணுவ கட்டளை அமைப்புக்கு வெளியே செயற்பட்டுள்ளது என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளது.
அந்தக் காலகட்டத்தில் கொழும்பு பிரிவுக்கு மேஜர் ஜெனரல் அஜித் பெரேரா தலைமை தாங்கினார் என்றும் சரத் பொன்சேகா கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு 5 தொலைபேசி சிம் அட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும், மரணச்சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று லசந்தவின் மரணம் துப்பாக்கிச் சூட்டினால் இடம்பெறவில்லை என்றும், தலையில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டே அவர் கொல்லப்பட்டுள்ளதாக மீள் உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வுகளில் இருந்து தெரியவந்திருப்பதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இதையடுத்து, விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறும், இதில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.