காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லை!- கோத்தா
சிறிலங்கா அதிபரையோ, பிரதமரையோ அடையாளம் காண முடியாத- கிராமப்புற தமிழ் மக்களால், இராணுவ அதிகாரி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு எவ்வாறு குற்றம்சாட்ட முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
காணாமல்போனவர்கள் விவகாரம் தொடர்பாக முன்னாள் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சுமத்தியிருந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
தடுப்புக் காவலில் உள்ளவர்கள் தவிர வேறெவரும் இல்லை என்று நான் நவநீதம்பிள்ளையிடம் கூறியிருந்தேன்.
தடுப்பில் உள்ளவர்களின் பெயர்கள் பற்றிய விபரங்கள் இருந்தன. அவர்கள் அப்போது காலியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தடுப்புக்காவலில் உள்ளவர்களின் பட்டியலில் இல்லாதவர்களின் பெற்றோர், அதனை ஏற்க விரும்பவில்லை.
ஏனையவர்கள் உயிருடன் இல்லை. ஜேவிபி காலகட்டத்தில் கூட இது நடந்தது.
காணாமல் போன சிலர் வெளிநாட்டில் வாழ்கின்றனர் அவ்வாறான ஒருவர் கனடாவில் இருப்பது பற்றிய உதாரணத்தை நவிபிள்ளையிடம் சுட்டிக்காட்டினேன்.” என்று குறிப்பிட்டார்.
இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் பற்றிய குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளித்த அவர்,
“எங்காவது யாரும் சரணடைந்தனரா இல்லையா என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வதந்திகளின் அடிப்படையில் மக்கள் பல்வேறு கதைகளைக் கூறுகின்றனர்.
சரணடைந்ததை கண்டதாக பிறர் கூறும் தகவல்களின் அடிப்படையில் தான் சிலர் கூறுகின்றனர். ஆனால் யாருமே சரணடைந்ததை நேரடியாக காணவில்லை. இது தான் போரின் உண்மையான நிலை. யாரும் இதனை நம்ப முடியாது.
வடக்கில் இறுதிக்கட்டப் போர் தொடங்கியதில் இருந்து 5000 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். ஒரு சக்திவாய்ந்த இராணுவத்திலேயே இந்தளவுக்கு இழப்பு ஏற்பட்ட போது, விடுதலைப் புலிகளின் தரப்பில் எந்தளவுக்கு இழப்புகள் ஏற்பட்டிருக்கும்? எம்மைப் போல அவர்களிடம் சுடுபல சக்தியோ பலமான இராணுவமோ இல்லை.” என்று கூறினார்.
தமது உறவுகள் யாரிடம் சரணடைந்தார்கள் என்று இராணுவ அதிகாரிகளின் பெயர்களைக் கூறுகிறார்களே என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள கோத்தாபய ராஜபக்ச,
“ இந்த அதிகாரிகளை அவர்களுக்குத் தெரியும் என்று நம்ப முடியுமா? போர் முனையில் இருந்த தனது அதிகாரிகள் யார் என்று இராணுவத் தளபதிக்குக் கூட தெரிந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இது போர் முடிவுக்கு வந்த பின்னர், உருவாக்கப்பட்ட கருத்து இது.
சிறிலங்கா அதிபரையோ, பிரதமரையோ அடையாளம் காண முடியாத- கிராமப்புற தமிழ் மக்களால், இராணுவ அதிகாரி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு எவ்வாறு குற்றம்சாட்ட முடியும்?
இத்தகைய சூழலில் காணாமல் போனோருக்கான பணியகம் என்பது, நடைமுறைச்சாத்தியமற்றது” என்றும் அவர் கூறியுள்ளார்.