Breaking News

இலங்கையில் பட்டம் பெற தகுதியில்லா சுமந்திரன் குறை கூறுவதா-சுரேஸ் கேள்வி


சுயநல காரணங்களை முன்னிட்டு,
போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதையும், காட்டிக் கொடுப்பதையும் தமிழரசுக் கட்சி கைவிட வேண்டும் என்று ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்ககை விடுத்துள்ளார்.

ஐநா மனித உர்மைப் பேரவை கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கை தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள இரண்டு விதமான கருத்து; நிலைப்பாடு காரணமாக தமிழரசுக் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் விமர்சனங்கள் உள்ளிட்ட பல விடயங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார்.

அந்த அறிக்கையின் முழு வடிவம் வருமாறு:

அண்மையில் பருத்தித்துறையில் நடந்த தமிழரசுக்கட்சியின் புதிய உறுப்பினர்களுக்கான அரசியல் கருத்தரங்கு ஒன்றில் திரு. சுமந்திரனும் மாவை சேனாதிராஜா அவர்களும் நீண்ட உரையாற்றியுள்ளனர். தமிழரசுக் கட்சியின் வரலாற்றையும் நிகழ்கால அரசியல் நிலைமைகளையும் அம்மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு சுமந்திரனை விட்டால் வேறு யாரும் தமிழரசுக் கட்சிக்குக் கிடைக்காமையானது தமிழரசுக் கட்சியினதும் அதன் தலைவரினதும் துரதிஷ்டமே.

சுமந்திரனின் பேச்சு

மேற்படிக் கருத்தரங்கில் தமிழரசுக் கட்சியின் தோற்றம், அதனை சமஷ்டிக் கட்சி என்று அழைத்ததன் வரலாறு, ஒற்றையாட்சி மற்றும் சமஷ்டி தொடர்பான அவரது வியாகக்கியானங்கள், காணாமல் போகச்செய்யப்பட்டோர் தொடர்பில் அவர் வெளியிட்ட நையாண்டித்தனமான கருத்துக்கள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்திடம் இலங்கை அரசாங்கம் இரண்டு வருடகால நீடிப்புக் கேட்டது தொடர்பான கருத்துக்கள், அந்த நீடிப்பை வழங்குவதற்கான அவரது வியாகக்கியானங்கள், வடக்கு-கிழக்கு தொடர்பான அவரது கருத்துக்களும் வியாக்கியானங்களுமென நீண்டதொரு உரையை ஆற்றியிருந்தார்.

எமது பதில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்று என்ற அடிப்படையிலும் அந்த கூட்டமைப்பை ஆரம்பித்ததில் ஒருவர் என்ற அடிப்படையிலும் கூட்டமைப்பிற்குள் இடையில் வந்து சேர்ந்த சுமந்திரனுக்கு அவர் சார்ந்துள்ள தமிழரசுக் கட்சியில் அவர் வகிக்கும் பதவி காரணமாக பதில் சொல்ல வேண்டிய நிலையை அவர் ஏற்படுத்தியுள்ளார்.

அண்மைக்காலமாக பல்வேறுபட்ட முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக கேலியானதும், கிண்டலானதும், நையாண்டித்தனமானதுமான கருத்துக்களை அவர் வெளியிட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டோர்

காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்தும் போராட்டம் தொடர்பாக அலரிமாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போதும் இப்பொழுதும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பாதிப்படையச் செய்யும் வகையில் நையாண்டித்தனமான மிகவும் மோசமான கருத்துக்களை தனது எஜமான விசுவாசத்துடன் கூறிவருகின்றார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது உண்ணாவிரதமிருந்த பதினான்கு பேரும் ஏதோ தங்களது உறவினர்களுக்காக மாத்திரம் உண்ணாவிரதமிருந்தது போலவும் அவர்களுடைய போராட்டம் காணாமல் போகச் செய்யப்பட்ட 20,000 பேருக்கானது அல்ல என்றும் அவர் கூறியதன் மூலம் எமது உறவுகளின் போராட்டத்தையே கொச்சைப்படுத்தியுள்ளார்.

இப்பொழுது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில், கிளிநொச்சியில், திருகோணமலையில் முல்லைத்தீவில் என வடக்கு-கிழக்கு முழுவதிலும் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் மிகப்பெரும்பான்மையானோர் அரச படைகளாலும் அரச புலனாய்வுப் பிரிவினராலும் கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும், கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். உண்மை நிலை இவ்வாறிருக்கையில், திருவாளர் சுமந்திரன் அவர்கள் அரசாங்கத்தையும் முப்படைகளையும் பாதுகாக்கும் விதத்திலும் பிரச்சினையின் உண்மையான முகத்தை திசைதிருப்பும் நோக்கிலும் கருத்துக்களை வெளியிடுகின்றார். அண்மையில் காணாமல் போகச் செய்தவர்களே காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்காகப் போராடுகிறார்கள் என்று அவர் வெளியிட்ட மோசமான கருத்து இதற்குச் சிறந்த உதாரணமாகும்.

எமது வரலாற்றுச் சுருக்கம்

வடக்கு-கிழக்கு இணைந்த ஒரு மாகாணத்தை உருவாக்கி பதினெட்டு மாதகாலம் அந்த மாகாணசபை நிர்வாகத்தை நடத்தியதுடன் பதினெட்டு ஆண்டுகளாக வடக்கு-கிழக்கு ஒரு அரசியல் நிர்வாக அலகாக இயங்கியதையும் அதை உருவாக்கிய பெருமையும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு உரித்தானது என்பதையும் வசதியாக மறந்துவிட்டு, அந்த நேரத்தில் தானுண்டு தனது படிப்புண்டு என்று இருந்து றோயல் கல்லூரியில் படித்து க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் பல்கலைக் கழகத்திற்கு அனுமதி பெறமுடியாமல் மதச் செல்வாக்கைப் பயன்படுத்தி, தமிழகத்தின் சென்னை லயோலா கல்லூரியில் படிப்பதற்கு ஓடிச்சென்றவருக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைப் பற்றியும் அதன் அரசியல் பாதையைப் பற்றியும் பேசுவதற்கு எந்தவித அருகதையும் இல்லை. அந்த நேரத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தெரிந்திருக்க வாய்ப்புமில்லை.

ஆனால் அப்பொழுது நடைபெற்றவைகளைத் தான் பார்த்ததாகக் கூறுவதிலிருந்தே இவர் எவ்வளவு பெரிய பொய்யர் என்பது தெளிவாகிறது.

தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான செயற்பாடு

புதிய அரசியல் சாசனம் தொடர்பாகவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பிரச்சினை தொடர்பாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த திருவாளர்கள் சுமந்திரனும் சம்பந்தனும் மாத்திரமே தான்தோன்றித்தனமாகக் முடிவுகளை எடுத்து செயற்பட்டு வருகின்றனர்.

வடக்கு-கிழக்கு இணைப்பு தொடர்பாக, சமஷ்டி அமைப்புமுறை தொடர்பாக, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாக, தமிழ் மக்களின் இறையாண்மை தொடர்பாக, தமிழ் மக்களுக்கான ஒரு சுயாட்சியை ஏற்படுத்துவது தொடர்பாக இலங்கையை ஒரு மதச்சார்பற்ற நாடாக ஆக்குவது தொடர்பாக பல விடயங்களை அரசாங்கத்துடன் பேசி ஒரு தீர்வை எட்டவேண்டியிருந்தது.

இதற்காகத்தான் 2015 பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழத் தேசியக்கூட்டமைப்பிற்கு ஆணையும் வழங்கியிருந்தார்கள். அவ்வாறானதொரு பேச்சுவார்த்தையை அரசாங்கத்துடன் ஆரம்பிக்கும்படியும் அப்பேச்சுவார்த்தைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக ஒரு குழுவை நியமிக்கும்படியும் இவற்றிற்கு ஒரு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் அவசியம் என்பதையும் மிக நீண்டகாலமாக வற்புறுத்தியும்கூட அதனை சம்பந்தரோ, சுமந்திரனோ ஏற்றுக்கொள்ளவில்லை.

மாறாக. அரசியல் சாசன உருவாக்கத்திற்காக நிறுவப்பட்ட வழிநடத்தல் குழுவில் இவர்கள் இருவரும் அங்கத்தவர்களாக இருப்பது மட்டுமன்றி, மேற்கூறப்பட்ட விடயங்கள் எதுவும் வழிநடத்தல் குழுவில் குறைந்த பட்சம் ஆராய்வதற்காகக்கூட எடுக்கப்படவில்லை எனவும் அந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்ற ஏனைய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

வடக்கு-கிழக்கு இணைப்பு

வடக்கு-கிழக்கு இணைப்பு என்பது தமிழ் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படைகளில் ஒரு முக்கியமான விடயம். இதனை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளாமையால் தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று திருவாளர்கள் சம்பந்தனும், சுமந்திரனும் கூறுகின்றனர். ஆனால் அதேசமயம், வடக்கு-கிழக்கு இணைவுக்கு தான் எதிரானவன் அல்ல என்று அமைச்சர் ஹக்கீம் கூறுகின்றார்.

வடக்கு-கிழக்கு இணைக்கப்படக்கூடாது என்பதிலும் இணைக்கப்படமாட்டாது என்பதிலும் இந்தநாட்டின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களும் உறுதியாக உள்ளனர். இந்த இடத்திலும் இவர்கள் முஸ்லிம் தரப்பின்மீது குற்றம் சுமத்தி, அரசைக் காப்பாற்றவே முயற்சிக்கின்றனர்.

அரசியல் கட்சியின் கடமை

ஒரு அரசியல் கட்சிக்கு, மக்கள் கொடுத்த ஆணையை நிறைவேற்றுவதற்கு என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற முடியுமோ அந்த வழிமுறைகளைக் கையாண்டு மக்களின் ஆணைகளை நிறைவேற்றுவதே அதன் முக்கியமான செயற்பாடாக இருக்க வேண்டும். இருக்க முடியும். அது மட்டுமன்றி, உரிமைகளுக்காகவும், அபிலாசைகளுக்காகவும், நல்லாட்சிக்காகவும், மக்களின் நலன்களுக்காகவும் போராடுவதென்பது அரசியல் கட்சிகளின் கடமை.

தமிழரசுக் கட்சியின் அரசியல் கொள்கை என்ன?

ஆனால், வடக்கு-கிழக்கை இணைக்க முடியாது என்ற நொண்டிச் சாட்டைக் கூறி, இப்பொழுது அது சாத்தியமில்லை என்ற பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு சுமந்திரனுக்கு அனுமதி அளித்தது யார்?

தமிழ் மக்களின் தலையெழுத்தை திருவாளர்கள் சம்பந்தனும் சுமந்திரனும் மாத்திரம் தீர்மானிக்க முடியாது. அதுவும் மக்கள் வழங்கிய ஆணைக்கு அப்பாற்சென்று எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து ஒரு உப்புச்சப்பற்ற தீர்வுக்குப் போவது ஏற்றுக்கொள்ளக்கூடியதுமல்ல. ஒற்றையாட்சி என்றால் என்ன? சமஷ்டி என்றால் என்ன? உலகில் எங்கெங்கு எத்தகைய ஆட்சி நடைபெறுகின்றது?

பிரத்தியேகமாக இலங்கையில் ஒற்றையாட்சி, சமஷ்டி தொடர்பில் எத்தகைய கருத்தோட்டங்கள் நிலவுகின்றன? என்பவை தொடர்பாக ஒரு பகிரங்க விவாதத்தில் விவாதித்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகின்றோம்.

சுமந்திரன் ஒரு சிறந்த சட்டத்தரணியாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வல்லமையுள்ள மக்கள் பிரதிநிதியாக அவர் பரிணமிக்கவில்லை என்பதை அவரது செயற்பாடுகள் நாளாந்தம் நிரூபித்து வருகின்றது.

ஐ.நாவும் சுமந்திரனும்

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதில் இலங்கை பிரச்சினையும் முக்கியவிடயமாக ஆராயப்படுகிறது. 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் உங்களால் நீர்த்துப் போகச் செய்யப்பட்டு இலங்கையின் இணைஅனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதுவரை இலங்கை அரசால் நிறைவேற்றப்படவில்லை

என்பதும் அதிலுள்ள முக்கிய அம்சங்களான போர்க்குற்றம் தொடர்பான விசாரணை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பிலான விசாரணை, காணாமல் போகச்செய்யப்பட்டோர் தொடர்பான விசாரனை போன்ற விசாரணைகளை நடத்துவதற்கு தீர்மானத்தில் குறிப்பிட்டவாறு சர்வதேச நீதிபதிகளையோ, பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகளையோ அழைக்க மாட்டோம் என்றும், இராணுவத்திற்கு எதிரான எந்த விசாரணை ஆணைக்குழுக்களும் நியமிக்கப்படமாட்டாது என்றும் அதேபோல் சர்வதேச சட்டத்தரணிகளோ அல்லது சர்வதேச வழக்கு தொடுநர்களோ அழைக்கப்படமாட்டார்கள் என்றும் இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

அவ்வாறான ஒரு சூழ்நிலையில், இலங்கை அரசாங்கம் கால நீடிப்பு கேட்பதன் அர்த்தம் என்ன? அந்த காலநீடிப்பை திருவாளர்கள் சுமந்திரனும் சம்பந்தரும் ஆதரிப்பதன் அர்த்தம் என்ன? அந்த காலநீடிப்பு கூடாது என மனித உரிமைகள் ஆணையகத்திற்கு அறிவித்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை முட்டாள்களாகவும், ஒற்றுமையைக் குலைப்பவர்களாகவும் இவர் குறிப்பிடுவதுடன், தலைவர் சம்பந்தனுக்கும் அண்ணன் மாவை சேனாதிராஜாவிற்கும் வெளிவிவகாரங்களைக் கவனிக்கக்கூடிய எனக்கும் தெரியாமல் இவர்கள் எவ்வாறு கடிதத்தை அனுப்ப முடியும் என்ற கேள்வியை திருவாளர் சுமந்திரன் கேட்டிருக்கின்றார்.

இந்தக் கேள்வியை கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்பதற்கு முன்னர், திருவாளர் சுமந்திரன் அவர்கள் தான் முன்னின்று உழைத்து நிறைவேற்றிய தீர்மானத்தை இலங்கை அரசு அமுல்படுத்துவதற்கு கடந்த இரண்டு வருடங்களில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பதை வெளியிடுவாரா?

இந்த விடயம் குறித்து ஒரு முறையேனும் பாராளுமன்ற குழுக்கூட்டத்திலோ அல்லது ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலோ திருவாளர் சுமந்திரன் வாய்திறவாதது ஏன்?

சுமந்திரன் கூட்டமைப்பின் வெளிவிவகாரச் செயலாளரா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிவிவகாரச் செயலாளராகவோ அல்லது வெளிவிவகார பொறுப்பாளராகவோ திருவாளர் சுமந்திரன் கூட்டமைப்பால் ஒருகாலத்திலும் நியமிக்கப்படவில்லை. கூட்டமைப்பின் வெளிவிவகாரங்களை கவனிப்பதற்கு ஒரு குழுவை நியமிக்கும்படி நாம் கேட்டபோதும் அது நியமிக்கப்படவில்லை.

எவ்வாறு கூட்டமைப்பு பதிவு செய்யப்படாமல், தான்தோன்றித்தனமான முறையில் சம்பந்தராலும் சுமந்திரனாலும் செயற்படுத்தப்படுகிறதோ அதைப்போலவே, வெளிவிவகார வேலைகளும் தான்தோன்றித்தனமான முறையில் இவர்களால் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்கக்கூடாது என்றும் அதனை இலங்கை மதித்து நடக்காது என்றும் கடந்த காலங்களில் அது அவ்வாறு நடக்கவில்லை என்றும் எதிர்காலத்திலும் ஐ.நா. தீர்மானங்களை மதித்து நடப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றும் காலத்தை கடத்துவதற்கான ஒரு யுக்தியாகவே காலநீடிப்பை இலங்கை அரசாங்கம் கோருகிறது என்றும் தமிழரசுக்கட்சி தவிர்ந்த கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தலைவர் சம்பந்தனுக்கு வலியுறுத்திக் கூறியிருந்ததுடன், ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கும் இக்கட்சிகளின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மட்டுமன்றி, தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்களும்கூட கடிதங்களை அனுப்பியிருந்தனர். இது ஒன்றும் இரகசியமான நடவடிக்கை அல்ல.

இதேபோல் மாகாண சபை உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் கையெழுத்திட்டு மனித உரிமை ஆணையாளருக்கு கடிதங்களை அனுப்பியுள்ளனர். நிலைமை இவ்வாறிருக்க, பெரும்பான்மையானோரின் கருத்துக்களுக்கு செவிமடுக்காமல் சம்பந்தனும் சுமந்திரனும் எடுத்துவரும் நடவடிக்கைகளானது தமிழ் மக்களின் எதிர்காலத்தையே நிர்மூலமாக்கும் செயற்பாடுகளாகும்.

அதுமாத்திரமல்லாமல், தமது சுயநலன்களுக்காக தமிழ்மக்களை பகடைக்காய்களாக்கி திரைமறைவில் அரசாங்கத்துடன் உடன்பட்டு செயற்படுகின்றனரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

கால அவகாசம் தொடர்பில் எமது நிலைப்பாடு

இங்கு இன்னொரு விடயத்தையும் நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகின்றோம். மேலதிக கால அவகாசம் கொடுக்கக்கூடாது என்பது இலங்கை அரசாங்கத்தை விடுவிப்பதற்காக அல்ல. மாறாக, இலங்கை தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணையை கோரி இந்த பிரச்சினையை ஐ.நா. பொதுச்சபையும் பாதுகாப்புச் சபையும் கையாள்வதற்கான ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டும்.

ஆகவே அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஐ.நா. பொதுச்சபை மற்றும் பாதுகாப்புச் சபையினர் மேற்கொள்வதற்கு நாம் தூண்டுகோலாக இருக்க வேண்டுமே தவிர, அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்து சர்வதேச சமூகத்தின் பங்களிப்பையும் ஐ.நாவின் செயற்பாட்டையும் தடுத்து நிறுத்தும் முட்டுக்கட்டைகளாக இருக்கக்கூடாது.

ஐ.நா. பொதுச்சபைக்கு இதனை அனுப்புவதன் ஊடாக, உடனடியாக பலாபலன்கள் ஏற்படாவிட்டாலும், எமது பிரச்சினையானது ஒரு சர்வதேச விசாரணை நடந்தேறும் வரையில், ஐ.நா.சபையில் அது தொடர்ச்சியாக இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஐ.நா. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கூடாகவோ, அல்லது ஒரு சிறப்பு தீர்ப்பாயத்தினூடாகவோ ஒரு சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு ஈழத் தமிழர்களாகிய நாமும் புலம்பெயர் தமிழர்களும் தமிழகத் தமிழ் மக்களும் தொடர்ச்சியான ஒரு அழுத்தத்தை மேற்கொள்ள முடியும்.

பாதுகாப்புச் சபையில் அங்கத்துவம் வகிக்கக்கூடிய நாடுகள் வீட்டோ அதிகாரங்களைக் கொண்டு இதனை நிறுத்த முடியும் என்று ஒருவர் வாதிடலாம். ஆனால் சர்வதேச சூழல் எப்பொழுது எவ்வாறு மாறும் என்று சொல்வதற்கில்லை. ஐ.நாவின் பொதுச்சபைக்கு இந்த விடயம் செல்கின்றபொழுது அது இலங்கை அரசாங்கத்திற்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கூர்வாளாகவே அமையும்.

ஆகவே கால அவகாசம் கொடுக்கக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும்சரி அரசியல் கட்சிகளும்சரி மேற்கண்ட அடிப்படையிலேயே அந்த கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள் என்பதை சுமந்திரன் இனிமேலாவது புரிந்துகொள்ளட்டும்.

செல்வாக்கிழந்த தமிழரசுக்கட்சி

நீங்கள் வெளியிட்ட நம்பிக்கையை ஏற்று, நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொண்ட முயற்சிக்கு மதிப்பளித்து எமது மக்கள் மகிந்தராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்து புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு உதவியிருந்தனர். தமிழ் மக்கள் பலத்த எதிர்பார்ப்புடன் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

மீள்குடியேற்றம் நடைபெறும். இராணுவம் வெளியேறும். காணாமல் போகச்செய்யப்பட்டோர் கண்டுபிடிக்கப்படுவார்கள். அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். வடக்கு-கிழக்கு இணைக்கப்படும். சமஷ்டி அரசியலமைப்பு உருவாகும். தமிழ் மக்கள் கௌரவமாக வாழும் சூழல் ஏற்படும் என்று நீங்களும் மக்களிடம் நம்பிக்கையூட்டினீர்கள்.

எமது மக்களும் பலமான நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக, அந்த நம்பிக்கைகளுக்கு சாவுமணி அடிக்கப்பட்டதே தவிர, அவர்களது கோரிக்கைகள் எதுவும் தீர்க்கப்பட்டதாக இல்லை. தமிழரசுக் கட்சியினராகிய உங்களால் ஒரு அரசியல் கட்சி என்னும் அடிப்படையிலும் மக்கள் வழங்கியுள்ள ஆணையின் அடிப்படையிலும் அவர்களின் கோரிக்கைகளில் ஒருபகுதியையேனும் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் மக்கள் உங்கள்மீது நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

இதயசுத்தியுடன் இணையுங்கள்

ஆகவேதான் இன்று தமது கோரிக்கைகளுக்கு தாமே போராடுவதைத் தவிர வேறுவழியில்லை என்பதை உணர்ந்து மக்கள் தாமே போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தத் தொடர் போராட்டத்தின் விளைவாகவே கேப்பாபிலவின் பிலவுக்குடியிருப்புப் பகுதியும், புதுக்குடியிருப்பில் ஒரு பகுதியும், கிளிநொச்சியில் பரவிப்பாஞ்சானில் ஒரு பகுதியும் விடுவிக்கப்பட்டது. போராடுவதைத் தவிர வேறுவழியில்லை என்ற காரணத்தினாலேயே யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும், முல்லைத்தீவிலும், வவுனியாவிலும், கிளிநொச்சியிலும் மக்கள் பல போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திவருகின்றனர்.

இவர்களுக்குத் துணையாக நின்று இலங்கை அரசாங்கத்திற்கு மேலதிக அழுத்தங்களைக் கொடுத்து இந்தக் கோரிக்கைகளை வெற்றியடையச் செய்வதற்கு அரசியல் கட்சிகள் என்ற அடிப்படையில் ஒத்துழைப்பாக இருப்போம். சுயநல காரணங்களை முன்னிட்டு போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதையும் காட்டிக்கொடுப்பதையும் அவற்றை நசுக்க முயற்சிப்பதையும் மக்கள் நலன்சார்ந்து இனிமேலாவது நிறுத்திக்கொள்ளுங்கள்.