இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக செயற்படுகின்றாரா? – சுனில் ஹந்துநெத்தி கேள்வி
இரா.சம்பந்தன் உண்மையாகவே எதிர்க்கட்சி தலைவராக செயற்படுகின்றாரா என்ற கேள்வி எழுகின்றதாகவும், அவர் அரசாங்கத்தின் எதிர்க்கட்சி தலைவராகவே செயற்படுகின்றார் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி முன்னணியின் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சைட்டம் சம்பந்தமாக நாட்டில் உள்ள மாணவர்கள் வைத்தியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடுகின்றார்கள். அதற்கு உங்களின் நிலைப்பாடு என்ன? வறட்சி நிவாரணத்தினைக் கேட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றார்கள். பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சகாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
வடக்கில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தினைச் சூறையாடும் இந்திய மீனவர்கள் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன என்பது பற்றித் தேடிப்பார்க்கின்றபோது, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கின்ற இரா.சம்பந்தன் எமக்கும் எதிர்க்கட்சி தலைவர்.
ஆனால், எதிர்க்கட்சி தலைவராக அங்கம் வகிக்கின்றவர் தமது மாவட்டத்தில் மாத்திரம் உள்ள மக்களின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கின்றாரா என தேடிப்பார்த்தால் அதுவும் இல்லை. இவர், அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சியாக இருக்கின்றாரே தவிர மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவராக இல்லை.
அதனால் மக்களின் எதிர்க்கட்சியாக, நாட்டில் லஞ்ச ஊழல் மோசடி போன்ற மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்ற உண்மையான எதிர்க்கட்சியாக செயற்படுகின்றதும் மக்கள் விடுதலை முன்னணியே.
வடக்கில் பொருத்து வீடுகள் குறித்து பல்வேறு மோசடிகள் ஏற்படுகின்றன. எமது நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கதைக்கின்ற போது எதிர்கட்சி தலைவர் மௌனம் சாதிக்கின்றவராக இருக்கின்றார். எதிர்க்கட்சி தலைவராக இருந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் சம்பந்தன் எடுக்கப்படவில்லை” என்றார்.