நான்கு நாடுகளின் தலைவர்களை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி
இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தென்னாபிரிக்க அதிபர் உள்ளிட்ட நான்கு நாடுகளின் தலைவர்களுடன் இன்று இரதுரப்புப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாடு இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இன்று நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று ஜகார்த்தா சென்றடைந்தார். அவரை ஜகார்த்தா விமான நிலையத்தில் இந்தோனேசிய உள்துறை அமைச்சர் வரவேற்றார்.
இன்று காலை இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் அமைப்பின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் சிறிலங்கா அதிபர் உரையாற்றவுள்ளார்.
அதையடுத்து, அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல், தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி ஆகிய தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்த சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ளார்.