Breaking News

புதுக்குடியிருப்பில் பகுதியளவு காணி விடுவிப்பு



முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வாக்குறுதி வழங்கப்பட்டதற்கு அமைவாக 7.75 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 28 ஆம் திகதி இரண்டு வாரங்களுக்குள் பொதுமக்களின் 7.75 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபரால் தெரிவித்திருந்தபோதும், வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ளாத மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு சென்ற மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் 7.75 ஏக்கர் காணிகளை மக்களிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இந்த நிலையில் காணிகளுக்குள் சென்ற மக்கள் யுத்தத்தில் பறிகொடுத்த உறவுகளை நினைத்து கதறி அழுததாகவும் தெரிவிக்கப்படுகின்றது

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பின் மையப்பகுதியுள்ள 49 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த மாசி மாதம் மூன்றாம் திகதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் புதுக்குடியிருப்பில் 682ஆவது படைப்பிரிவினால் சுவீகரிக்கப்பட்ட பொதுமக்கள் 29 பேரினுடைய 7.75 ஏக்கர் காணி 2 வாரத்தில் விடுவிக்கப்படும் என்றும் மீதமுள்ள 29 பேரின் 10 ஏக்கர் காணி இராணுவ முகாமில் அமைக்கப்பட்ட கட்டடங்களை அகற்றிய பின்னர் மூன்று மாதத்திற்குள் விடுவிக்கப்படும் என்றும் பொன்னம்பலம் வைத்தியசாலைக் காணி விடுவிப்பதற்கு 6 மாத காலம் தேவைப்படுவதாகவும் இதன்படி போராட்டத்தைக் கைவிடுமாறும் வலியுறுத்தப்பட்டது. 

எனினும் புதுக்குடியிருப்பு மக்கள் உடன்படாத நிலையில், 7.75 ஏக்கர் காணிக்குள் தங்களை விடும்வரை போராட்டம் தொடரும் என மக்கள் தெரிவித்திருந்த நிலையில் வாக்குறுதிக்கு அமைவாக 7.75 மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.