சிறிலங்கா விழித்துக் கொள்வதற்கான அழைப்பு – ‘தி ஹிந்து’ ஆசிரியர் தலையங்கம்
சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டமையானது, சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் விழித்துக் கொள்வதற்கான அழைப்பாகக் கருதப்பட வேண்டும்.
போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை உட்பட 2015ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்கா அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய போது அதனால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை தொடர்பாக தற்போது ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறுவதில் சிறிலங்கா அரசாங்கம் காலத்தை இழுத்தடிப்பதானது நாட்டில் நிலையான அமைதிக்கு அச்சுறுத்தலாக எழுந்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தை இந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட, வன்முறையை அதிகளவில் பிரயோகித்தல், சித்திரவதை, பலவந்தக் கைதுகள் போன்றன தற்போதும் சிறிலங்காவில் தொடர்வதாகவும் தற்போது ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் தற்போதைய அதிபர் ஆட்சிக்கு வரும்போது நாட்டில் சட்ட ஆட்சியை ஏற்படுத்துவேன் எனவும் அனைத்துலக சமூகத்தை உள்வாங்குவதுடன் சிறுபான்மைத் தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான நகர்வுகளை முன்னெடுப்பேன் எனவும் வாக்குறுதி வழங்கியிருந்தார்.
அத்துடன் 2015ல் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டவாறு அனைத்துலக சமூகத்தின் பங்களிப்புடன் நீதிச் சேவையை மேற்கொள்வதாகவும் சிறிலங்கா உறுதி வழங்கியிருந்தமையானது அதியுச்ச நம்பிக்கையை வழங்கியது.
நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுப்பதில் சிறிலங்கா அரசாங்கம் தாமதத்தை ஏற்படுத்தி வருகிற போதிலும், முன்னைய ஆட்சியாளரான மகிந்த ராஜபக்சவால் முன்னெடுக்கப்பட்ட நகர்வுகளை விட சிறிசேன அரசாங்கமானது தமிழ் மக்களின் சில பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நகர்வுகளை மேற்கொள்வதுடன் அரசியல் யாப்பு சீர்திருத்தத்தையும் மேற்கொண்டு வருகிறது.
போர்க் காலத்தில் காணாமலாக்கப்பட்ட 65,000 வரையான மக்களுக்கு என்ன நடந்து என்பதை ஆராய்வதற்கான காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஒன்றையும் அமைப்பதற்கான சட்டமூலம் ஒன்றை சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் சட்டசபையில் முன்வைத்துள்ளது.
ஆனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைத்தல், வடக்கு – கிழக்கில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் தமிழ் மக்களிடம் கையளிப்பதற்கான நகர்வுகள் போன்ற மிக முக்கிய விடயங்களில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தமது நிலங்களைத் தம்மிடம் மீளக்கையளிக்குமாறு கோரி வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களால் அரசாங்கத்தின் பிரதேச செயலகங்களின் முன்னால் தொடர் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட வேளையிலேயே ஐக்கிய நாடுகள் சபையால் அறிக்கை வெளியிடப்பட்டது.
மகிந்த ராஜபக்சவின் அரசியல் இருப்பை மீண்டும் நிலைப்படுத்திக் கொள்வதற்காக ஆதரவுகளை வழங்கி வரும் சிங்கள தேசியவாதிகளின் எதிர்ப்பைச் சம்பாதிப்பதைத் தவிர்ப்பதற்காகவே, சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கமானது நல்லிணக்க முயற்சிகளில் விரைவான தீர்மானங்களை எடுக்க முடியாதிருக்கலாம்.
ஆனால் அரசாங்கத்தின் இத்தாமதமானது அரசாங்கத்திற்குள் உள்ள கட்சிகளின் வெறுப்பைச் சம்பாதிப்பதற்கும், பொதுமக்களின் நம்பிக்கையை இழப்பதற்கும் குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தின் மீதான தமது நம்பிக்கையை இழப்பதற்கும் எதிர்க்கட்சியினர் மீளவும் தமக்கான ஆதரவைப் பலப்படுத்திக் கொள்வதற்குமான மேலதிக காலஅவகாசத்தை வழங்குவதற்குமான ஒரு சூழலை உண்டு பண்ணியுள்ளது.
இராணுவத்தினர் அதிகளவில் பயன்படுத்தப்படுதல், பலவந்தக் கடத்தல்கள் உட்பட்ட பல்வேறு பிரச்சினைகள் போன்றன அரசாங்கமானது நாட்டின் அரசியல் முறைமையை மாற்றுவது தொடர்பில் தீவிர கரிசனை காண்பிக்கவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமானது இந்தச் சூழலைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான முயற்சியை மேற்கொள்வதுடன், நல்லிணக்கத்தை முன்னெடுத்தல் மற்றும் நாட்டின் எதிர்காலம் போன்ற முக்கிய விவகாரங்களை முன்னெடுப்பதில் தீவிரம் காண்பிக்க வேண்டும்.
மொழியாக்கம் – நித்தியபாரதி