Breaking News

ரஜனிகாந் ஏன் வரக்கூடாது-பல்கலை மாணவன் விளக்கம்(கடிதம்)


யாழ்ப்பாணம் வரவிருந்த ரஜனிகாந் ஏன் இப்போது
வருவதை நாம் விரும்பவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் ஒருவர் அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்த கடிதம் வாசகர்களின் பார்வைக்காக இணைத்துள்ளோம்.

சிரல் ஏன் ரஜனிகாந் வருவதை எதிர்க்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பதிவுகளை செய்துவருகின்ற நிலையில் அவர்கள் புரிதலுக்காகவும் ஏன் இந்த சந்தர்ப்பத்தில் ரஜனி வருகைக்கு யாழில் எதிர்ப்பு எள்ளது உன்பதை தெளிவுபடுத்துவதற்காகவும் இங்கு அதனை பதிவு செய்கின்றோம்.

யாழ்ப்பாணம்.
24-03-2017
மதிப்பிற்குரிய ரஜினிகாந் அவர்கள்,
18, ராகவேந்திரா அவனியூ,
போயஸ் கார்டன்,
சென்னை 86,
தமிழ்நாடு.

என்றும் எங்கள் மதிப்பிற்குரிய சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் அவர்களுக்கு,

ஈழத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து உங்கள் ரசிகன் ஒருவன் எழுதிக்கொள்வது,
தங்கள் பெறுமதியான பொழுதுகளில் சிலமணித்துளிகளை இந்தக் கடிதத்திற்காக ஒதுக்கிக் கொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

உலகெங்கும் பரந்துவாழ்கின்ற தமிழ்மக்கள் மத்தியில் நிலையான இடத்தினைப் பெற்றிருக்கின்ற விடயங்களில் தென்னிந்திய தமிழ் சினிமாவும் ஒன்று. அந்த தமிழ் சினிமாவின் அடையாளங்களாகச் சொல்லத்தக்கவர்களில் ஒருவராகிய தாங்கள் யாழ்ப்பாணம் வருவதாக ஊடகங்கள் வாயிலாக அறியமுடிந்தது.

எங்கள் மக்களைத் தாங்கள் தரிசிக்கவேண்டும், அவர்களோடு சில மணிநேரமாவது உறவாடவேண்டும் என்று தாங்கள் எண்ணி அந்த நிகழ்ச்சிக்காக ஒப்புதல் வழங்கியிருப்பீர்கள் என்பது மட்டும் எங்களுக்குத் தெரியும்.
ஆனாலும், எங்கள் மண்ணில் தற்போதைய சூழல் தொடர்பில் தங்களுக்குச் சில விடயங்களை தெளிவுபடுத்தலாம் என்கிற எண்ணம் நான் உட்பட்ட இங்கிருக்கின்ற பெரும்பாலானவர்களிடம் காணப்படுகிறது.

முள்ளிவாய்க்காலில் மக்கள் கொத்துக்கொத்தாகச் செத்துவீழ்ந்தபோது தமிழகமும் தமிழ்த்திரையுலகும் வீதியில் இறங்கி எங்களுக்காக ஜனநாயகப் போர்க்கோலம் பூண்டமை இன்னமும் கண்முன்னே விரிகிறது.

2009 மே 18 உடன் எல்லாமே முடிந்துவிட்டதாக பகிரங்க விளம்பரங்கள் தென்பட்டாலும் உண்மையில் இன்னமும் எங்கள் மக்கள் வீதிகளிலேயே அலைகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடி உண்ணாமல் கிடக்கும் போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டுவருகிறார்கள்.

தங்கள் பாட்டன், பூட்டன் வாழ்ந்த பூர்வீக மண்ணில் தலைசாய்த்து உறங்க அனுமதிக்கவேண்டும் என்று போராடிவருகிறார்கள். மக்களின் போராட்டம் தொடர்பிலான செய்திகள் பெரிய அளவில் ஊடகங்களை அலங்கரிப்பதில்லை. மாறாக அரசியல் நலன் சார்ந்த நோக்கில் முன்னெடுக்கப்படுகின்ற கேளிக்கை நிகழ்ச்சிகளே பாரிய அளவில் வெளிக்காட்டப்படுகின்றன.

இதன் அடிப்படையில் தாங்கள் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிகழ்ச்சிகூட ஒரு அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.

நீங்கள், சினிமாவைத் தொழில்ரீதியான ஒரு விடயமாகப் பார்க்கும் ஒரு
யதார்த்தவாதி என்பதன் அடிப்படையில் சில சம்பவங்களைத்தங்கள் பார்வைக்கு தரலாம் என்று எண்ணுகிறேன்.

தற்போது குறிப்பிட்ட நிறுவனத்தினால் மக்களுக்கு கையளிக்கவுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டு வீடுகளுக்கான அடிக்கல்லினை நாட்டியவர் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க என்பதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

1995ஆம் ஆண்டில் ஈழத்தமிழர்களின் அடையாளமாகச் சொல்லத்தக்க யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து ஐந்து இலட்சம் மக்கள் இடம்பெயரக் காரணமான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டவர் சந்திரிகா. அதேபோல இடம்பெயர்ந்த மக்கள் வன்னியில் செறிந்து வாழ்ந்தபோது மருந்து, உணவு உட்பட்ட அத்தியாவசிய பொருட்கள் மீதான தடையை ஏற்படுத்தி அந்த மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்ள வைத்தவரும் அதே சந்திரிகா அம்மையார்தான்.


இதனைவிட பசியாலும் பிணியாலும் பாதிக்கப்பட்டுக் கிடந்த மக்கள் மீது தரை வழியாகவும், வான் வழியாகவும் குண்டுகள் வீசிப் பல நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலியெடுக்க உத்தரவிட்டவரும் அதே சந்திரிகா அம்மையார்தான்.

எனவே இவ்வாறான குரூர செயல்களின் சூத்திரதாரியாக இருந்த ஒருவர் அடிக்கல் நாட்டிய வீடுகளை உழைப்பை மட்டுமே நம்பி உலகத்தரத்துக்கு உயர்ந்த ஒரு நேர்மையாளனாகப் போற்றப்படுகின்ற நீங்கள் திறந்துவைக்கப்போகிறீர்கள் என்ற செய்தி பாதிக்கப்பட்ட எங்கள் மக்களை வலுவாக வேதனையடையவே வைத்திருக்கிறது.

இன்னொரு வகையில், தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கின்ற தமிழினத்துக்கு எதிரான அரசியல் காய் நகர்த்தல்கள் மிகவும் பாரதூரமானவை. வன்னியில் இறுதிப்போரில் கொத்துக்கொத்தாக செத்துவீழ்ந்த பல்லாயிரம் உயிர்களின் இழப்பிற்கு நீதிவழங்கும் நடவடிக்கையை ஐக்கியநாடுகள் சபை முன்னெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடம் காணப்;படுகிறது.



ஐக்கியநாடுகள் சபையின் இலங்கை மீதான அழுத்தம் அதிகரிக்கும்போது
இறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் தொடர்பிலான முடிவினை எடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு இலங்கை அரசாங்கம் உட்படலாம். அதன் மூலம் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தால் விடுதலையாகுவதற்கு வாய்ப்பும் ஏற்படலாம்.

அதேபோல உலக நாடுகளின் அழுத்தம் அதிகரிக்கின்றபோது தமிழ்மக்கள் எழுபது ஆண்டுகளாக சந்தித்துவருகின்ற இன ஒடுக்குமுறைக்கு ஒரு வலுவான அரசியல் தீர்வுகூடக் கிடைக்கலாம் என்பதாலேயே சர்வதேச விசாரணை உட்பட்ட விடயங்களை தமிழ்மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் மாறாக, இலங்கையின் ஆட்சியாளர்கள் தாமும் தமக்கு சார்பானவர்களையும் பயன்படுத்தி இலங்கையில் இயல்பான நிலை காணப் படுகிறது, அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிட்டது போன்ற தோற்றப்பாடுகளை உலகநாடுகளுக்குக் காட்டுவதற்கு முற்படுகின்றன.

இந்த நிலையில் தாங்கள் யாழ்ப்பாணம் வருகின்றபோது தங்கள் மீது அன்பும் பாசமும் வைத்திருக்கின்ற எங்கள் உறவுகள் உங்களைச் சந்திப்பதற்கு முண்டியடிப்பார்கள். அந்த விடயங்களை வைத்து இங்கிருக்கின்ற மக்கள் கேளிக்கை விடயங்களில் மூழ்கித்திளைக்கிறார்கள்; இயல்பு நிலை ஏற்பட்டுவிட்டது என்பதைக் காட்டுவதற்கு ஆட்சிபீடம் முன்நிற்கும் என்பதை நிராகரிக்கவே முடியாது.

அதேவேளையில் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுவருகின்ற வீடுகளைக் கையளிப்பதற்கு அங்கிருந்து 150 கிலோமீற்றர் தொலைவிலுள்ள யாழ்ப்பாணத்தில் நிகழ்ச்சி நடத்தப்படுவதுதான் உள்நோக்கம் கொண்டது என்பதை  புலப்படுத்துகின்றது.

இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான விடயத்தினை தங்களின் கவனத்திற்காகத் தரலாம், தமிழ்மக்களின் ஏகோபித்த நன்மதிப்பை பெற்றிருக்கும் வடக்குமாகாண முதலமைச்சர் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நீங்கள் பங்கேற்கின்ற நிகழ்ச்சிக்கு வருவதாகவே உங்களுக்குத் தகவல் வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவர் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்திருக்கிறார் என்ற நம்பகமான செய்தியையும் தங்களுக்கு அறியத்தரவிரும்புகிறேன்.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அரசுக்கு இரண்டுவருட அவகாசம் கொடுப்பதற்கு தமிழ்த்தரப்பில் சிலர் ஆதரவாகச் செயற்பட்டபோதும், அவ்வாறு வழங்கக்கூடாது என்று வலியுறுத்தியவர் வடக்கு முதலமைச்சர் அவர்கள். தமிழ் மக்களின் குரலாக செயற்பட்டுவருகின்ற ஒரே தலைவர் அவர் மட்டும் தான் என்கிற நம்பிக்கை தமிழ்மக்கள் மத்தியில் காணப்பட்டுவருகிறது.

அரச நிகழ்ச்சிநிரலின் கீழ் சூப்பர் ஸ்ரார் அவர்கள் பங்கேற்கின்ற நிகழ்ச்சியினைச் சர்வதேச அரங்கில் அரசியலாக்கும் முயற்சி இடம்பெறுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதால் அதனை நிராகரிப்பதாகத் தெரிவித்தே வடக்கு முதல்வர் நீங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியைப் புறக்கணிப்பதாக அறியமுடிகிறது.

கேப்பாபுலவிலும், கிளிநொச்சியிலும், யாழ்ப்பாணம் மருதங்கேணியிலும் ஏன் வவுனியாவிலும் மக்கள் இன்றும் வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள்.

தங்கள் பிள்ளைகள் வீடுவரவேண்டும், தங்கள் முற்றத்தில் தாங்கள் அமர்ந்து
உணவு உண்ணவேண்டும் என்பதாக அந்த மக்களின் போராட்டம் நீள்கிறது.
இவ்வாறான போராட்டங்களை திசைதிருப்புவதற்கு தங்களைத் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்துவதைத் தங்கள் ரசிகர்களாகிய நாங்கள் ஏற்கச்  சிரமமப்படுகிறோம்.

எங்கள் மண்ணில் முதன்முதலில் கால் பதிக்கும் தாங்கள் எமது மக்களுக்கு
எதாவது ஒரு சிறிய உரிமையேனும் கிடைத்தபின்னர் கால் பதித்தால் என்ன
என்கிற ஆதங்கம் எங்களிடம் காணப்படுகிறது.

நீங்கள் எடுக்கின்ற முடிவுகள் யதார்த்தமானவை, உண்மையின் பாற்பட்டவை என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். எனவே, உங்கள் பயணத்தின் வலிமையையும் தங்கள் பெறுமதியையும் உணர்ந்தவர்கள் என்ற அடிப்படையிலேயே இந்த நிகழ்ச்சியைப் புறக்கணிக்குமாறும் அதற்கான சந்தர்ப்பசூழல் ஏற்படும்போது தாங்கள் எமது மண்ணுக்கு வருகின்ற நிலை தன்னாலேயே ஏற்படும் என்றும் கூறி விடைபெறுகின்றேன்.

நன்றி
அன்புடன்,
ஈழப்பிரியன்,
யாழ்ப்பாணம்.


தொடர்புடைய செய்தி

எதிர்ப்பின் எதிரொலி- யாழ்ப்பாணம் வரமாட்டேன் ரஜனி அதிரடி

ரஜனியின் வருகைக்கு முதலமைச்சர் எதிர்ப்பு!

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்