காங்கேசன்துறையில் படையினர் வசமுள்ள 29 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்க நடவடிக்கை!
காங்கேசன்துறையில் படையினர் வசமுள்ள 29 ஏக்கர் நிலப்பரப்பினை பொதுமக்களிடம் ஒப்படைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சிடமிருந்து கடிதம் கிடைத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
குறித்த காணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் நாளுக்கு முன்னதாக உரியவர்களிடம் கையளிக்கப்படும் எனவும் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, காங்கேசன்துறை தல்செவன உல்லாச விடுதிக்கும், ஊறணியில் கையளிக்கப்பட்ட தற்காலிக இறங்குதுறைப் பிரதேச கடற்கரைக்கும் இடையிலேயே குறித்த 29 ஏக்கர் நிலப்பரப்பும் உள்ளடங்குவாதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த பகுதியில் உள்ள காணிகளை விடுவித்தால் 250 மீனவர்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு எல்லையிடப்பட்ட பிரதேசத்தினை விடுவித்தாலே குறிப்பிட்ட பி்தேசத்தினில் 250 மீனவக்குடும்பங்கள் வாழ முடியும் என வலி வடக்கு மீள் குடியேற்ற புனர்வாழ்வு சங்கத்தினர் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜாவின் ஊடாக தெரிவித்து குறிப்பிட்ட பகுதிகளையும் விடுவிக்கமாறு கோரிக்கை விடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.